0,00 INR

No products in the cart.

முடவனுக்கும் மோட்சம்!

பொ.பாலாஜிகணேஷ்

கான்களும் ஞானிகளும் ஒன்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
நீ துன்பப்பட்டாலோ, எதையாவது இழந்து தவித்தாலோ அது நீ முன்பிறவியில் செய்த பாவப்பலன். அதை நீ அனுபவித்தே ஆக வேண்டும். அடுத்த பிறவியிலாவது நீ நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், இந்தப் பிறவியில் நல்லன செய், தர்மத்தைக் கடைபிடி, பகவானை நாடு’ என்பதுதான். இறைவனை இடைவிடாமல் தொழுதால் அவன் அருள் தானே வந்து சேரும் என்பதற்கு உதாரணமாக விளங்குவது, ‘முடவன் முழுக்கு’ எனும் இறைவனின் திருவிளையாடல் ஆகும்.

காசிக்கு நிகராகக் கருதப்படும் சிவாலயங்களில் மயிலாடுதுறை, அருள்மிகு அபயாம்பிகை சமேத ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயிலும் ஒன்று. தொன்மை வாய்ந்த இந்த சிவத்தலத்தை, மாயவரம், மயூரம் என்றும் அழைப்பார்கள். இத்தலத்தில் காவிரியோடு இணைந்த தீர்த்தத்தை, ‘ரிஷப தீர்த்தம்’ என்பர். இதில் நீராடுவது பெரும் புண்ணியம் ஆகும். ஐப்பசி மாதக் கடைசி நாளன்று இதில் நீராடுவதை, ‘கடைமுழுக்கு’ என்பர். அடுத்த நாள் கார்த்திகை மாதம், முதல் நாள் நீராடுவதை, ‘முடவன் முழுக்கு’ என்பர்.

ஐப்பசி மாதம் காவிரி நதியில் கங்கா தேவி வாசம் செய்வதாக ஐதீகம். இதனால், தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லட்சுமி, கௌரி, சப்த மாதர்கள் ஆகியோர் இம்மாதத்தில் இந்நதியில் நீராட வருகின்றனர். இதனால்தான் துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையது ஆகும். இதனால், பாவங்கள், துன்பங்கள் நீங்கி புண்ணியப் பலன்கள் சேரும் என்பது நம்பிக்கை. இந்தத் தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் தொடங்கி, கார்த்திகை மாதம் முதல் நாள் வரை நீராடுவது விசேஷம். அதிலும், ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுழுக்கு அன்று நீராடுவது மிகவும் சிறப்பு. மேற்கண்ட நாட்களில் நீராட முடியாவிட்டாலும், கடைசி நாளில் காவிரியில் நீராடி ஸ்ரீ மயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

துலா மாதத்தில் மூன்றரைக் கோடி தீர்த்தங்கள் காவிரியில் வந்து சேருவதால், அச்சமயம் இதில் நீராடுவதன் மூலம் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம், புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். எனவே, வாழ்வில் ஒரு முறையேனும் துலா ஸ்நானம் செய்ய வேண்டும்.

கார்த்திகை மாதம் முதல் நாள் இத்தலத்திலுள்ள காவிரி நதியில் நீராடுவதற்கு, ‘முடவன் முழுக்கு’ என்று பெயர். காவிரி நதியில் நடைபெறும் மிகவும் விசேஷமான துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தனது பாவத்தைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்குக் கிளம்பினான்.

தனது இயலாமையால் மயிலாடுதுறை துலா கட்டத்துக்கு வந்து சேர்வதற்குள், ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் தொடங்கிவிட்டது. எனவே, ‘முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து நீராடிச் செல்வது என்பது இயலாத காரியம்’ என இறைவனிடம் அவன் வருந்தி முறையிட்டுத் தொழுததால் சிவபெருமான், “நேரம் கடந்து விட்டாலும் பரவாயில்லை. நீ போய் தீர்த்தத்தில் மூழ்கு! உனக்கும் முக்திப் பேறு கிடைக்கும்” என்று அருள்புரிந்தார்.

இறைவன் கூறியபடி, காவிரியில் அவன் நீராடியபோது முடம் நீங்கி, மிகுந்த அழகுடன் கரையேறினான். இறைவனின் அருளைக் கண்டு, “இறைவாஎனக்குக் கிடைத்த இந்த பாக்கியம் பூமியிலுள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஐப்பசியில் நீராடி புண்ணியம் பெற முடியாவிட்டாலும், கார்த்திகையில் நீராடி எழும் பக்தர்கள் எல்லோருக்கும் இப்புண்ணிய பலன் கிடைக்க வேண்டும்” என்று வரம் கேட்டுப் பெற்று, முக்தி அடைந்ததாக ஐதீகம். இதுவே, ‘முடவன் முழுக்கு’ எனப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. இன்று கரை புரண்டு ஓடும் காவிரிக்குச் செல்வோம்; முடவன் முழுக்கு முழுகி முழுமையாக ஈசனின் அருளைப் பெறுவோம்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

விழித்திருக்கும் மஹாதேவ்!

- எம்.அசோக்ராஜா ஒரு சமயம் சிவ பக்தர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கேதார்நாத் சிவபெருமானை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. அதனால் அவர் நடை பயணமாக கேதார்நாத் வழியை கேட்டபடியே மனதில்...

பகவான் உவக்கும் காணிக்கை!

0
- பொ.பாலாஜிகணேஷ் வடதேசம் சோம்நாத் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பூக்காரப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவள் அந்த ஊரின் அருகே இருந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் வாசலில் பூ வியாபாரம்...

ஆற்றுப்படுத்தும் அருட்துறைநாதர்!

0
- சிவ.அ.விஜய் பெரியசுவாமி சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புராதனமான திருத்தலம் திருவெண்ணைய்நல்லூர். பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டதால் அதன் வெம்மை ஈசனைத் தாக்காமல் இருக்க, பார்வதி தேவி குளிர் சோலைகள் சூழ்ந்த பெண்ணை...

வார்த்தையிலும் உண்டு விஷம்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடைபெற்ற குருக்ஷேத்திரப் போர் முடிவுக்கு வந்தது. திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கூட அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள்...

சியாமளனின் ஸ்ரீராம பக்தி!

0
- வஸந்தா வேணுகோபாலன் சியாமளன் எனும் ஸ்ரீராம பக்தன், தனது குருவிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தான். ஒரு நாள் சியாமளன் தனது குருவிடம், “குருவே, ஸ்ரீராமபிரான் என்னைப் போன்ற எளியவர்களுக்கு தரிசனம் தருவாரா?” என்று வினயத்துடன்...