முகநூல் என்பது அவரவர் சொந்த பத்திரிகை! எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேட்டி!.

முகநூல் என்பது அவரவர் சொந்த பத்திரிகை! எழுத்தாளர்  பட்டுக்கோட்டை பிரபாகர் பேட்டி!.

நேர்காணல்; சேலம் சுபா.

தமிழில் வாசிப்பை நேசிக்கும் ரசிகர்களுக்கு இவர் படைப்புகள் என்றால் கொண்டாட்டம் .எழுத்தின் மூலம் எண்ணற்ற இதயங்களை தன்பால் கவர்ந்தவர் .எழுத்து இவரின் சிறப்பு என்றால் – என்றும் உற்சாகத்துடன் புன்னகை தவழும் இளமைத் தோற்றம் இவருக்கான மற்றொரு அடையாளம். நாவல்கள் மட்டுமல்ல.. சின்னத்திரை, பெரியதிரை, பதிப்பகம் முகநூல் என எழுத்து சார்ந்த அத்தனை துறைகளிலும் தன் முத்திரைகளைப் பதித்து தனித்துவமாக அறியப்படுபவர்.

எழுத்தை ஆள்வதற்கு முன் நீங்கள் ?
பிறந்த ஊர் காரைக்குடி .பள்ளிப்படிப்புடன் வளர்ந்த ஊர் பட்டுக்கோட்டை கல்லூரிப்படிப்பு திருச்சி .இப்போது இருப்பது தலைநகர் சென்னையில்! 77-ல் கல்லூரிப்படிப்பை முடித்ததும் பட்டுக்கோட்டையில் அப்பாவின் வர்த்தக நிறுவனத்தில் ஈடுபாடு .அதற்கு முன்பிருந்தே எழுத்திலும் ஆர்வம் இருந்தது..அதே வருடம் என் முதல் சிறுகதை பத்திரிக்கையில் வெளியானது .சின்ன வயசுல இருந்தே என்னோடு பின்னிப்பிணைந்தது வியாபாரமும்! .பள்ளி விட்டு வந்ததுமே கடைக்கு சென்று விடுவேன் ..என்ன வாங்கணும் எங்க வாங்கணும் என்பது முதல் எப்படி விற்பனை செய்வது, மற்றும் கணக்கு வழக்குகள் வரை அத்தனையும் அத்துப்படி வியாபார நுணுக்கங்களை அப்பாவிடம் இருந்து கற்றேன் வீட்டுக்கு மூத்த மகன் என்பதால் பொறுப்புடன் இருப்பேன்.

குடும்பத்துடன் பட்டுக்கோட்டை பிரபாகர்..
குடும்பத்துடன் பட்டுக்கோட்டை பிரபாகர்..

அதே நேரம் விளையாட்டாக பொழுதுபோக்காக துவங்கிய எழுத்து என் பொழுதுகளை முழுமையாக கேட்கத் துவங்கியது …எனக்காகவே துவங்கப்பட்ட நாவல் டைமுக்காக மாதம் ஒரு நாவல், மாதநாவல்கள் அப்போது கொடிகட்டிப் பறந்ததால் நான்கு நாவல்கள் ஒரு மாதத்தில் மற்றும் ஐந்து தொடர்கதைகள் என எழுத்திலும் பிசியாக இருந்தேன் .எனக்கான வாசகர் வட்டத்தையும் பத்திரிக்கை தொடர்புகளையும் பட்டுக்கோட்டையில் உள்ளபோதே வசப்படுத்தி இருந்தேன் . வணிகத்தை விட அதிகமாக நேசித்து என் நேரங்களை முழுமையாக ஆக்கிரமித்த எழுத்துக்காக என் பாதையை மாற்றிக்கொள்ளும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் .காலமும் சரியாக காட்டியது.தம்பி படித்து விட்டு வந்ததும் அவரிடம் வியாபார பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு என் கனவான எழுத்தில் சாதிக்க வேண்டும் எனும் நோக்குடன் சென்னைக்கு வந்தேன்..

சினிமா மேல் எப்போது வந்தது காதல் ? சினிமாவில் உங்கள் பங்களிப்பு ?
நான் கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவின் ரசிகனாக இருந்தேன் .படித்தது எகனாமிக்ஸ் என்பதால் நிறைய நேரம் இருந்தது .திருச்சியில் நான் செல்லாத தியேட்டர்களே இல்லை .ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் கூட பார்த்ததுண்டு .நல்ல நண்பர்களுடன் சேர்ந்து அதிகம் படங்கள் பார்த்தேன் .சினிமா மீதான ஈர்ப்பில் சினிமாவை நேசித்த காதலனாகவும் மாறினேன் .ஆனால் எழுத்துதான் என் முதல் குறிக்கோள். சொந்தமாக பத்திரிக்கை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம் . சென்னை வந்ததும் எழுத்தாள நண்பர்கள் சுபாவுடன் இணைந்து பத்திரிக்கைகளை சொந்தமாக துவங்கி நடத்தினேன் .

எங்கள் பத்திரிக்கைப் பேட்டிக்காக திரு .பாக்யராஜ் சாரை சந்தித்த போது அவர் சொன்ன வார்த்தைகளே என் சினிமா ஆர்வத்தை மேலும் தூண்டியது எனலாம் .அவர் சொன்னது இதுதான் ."பத்திரிக்கைகளில் எழுதுபவர்களிடம் நிறைய கதைகள் இருக்கும் . ஒரு நல்ல கதைதான் சினிமாவின் வெற்றிக்கு அடித்தளம் .ஆனால் என்ன காரணமோ எழுத்தாளர்கள் அதிகம் பேர் சினிமாவிற்குள் வருவதில்லை" என்றார்.
சினிமாவைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இருந்த நான் அவரிடமே கேட்டேன் .அவரின் உதவி இயக்குனராக 'பவுனு பவுனுதான்', 'அவசர போலீஸ்' என இரண்டு படங்களில் பணி செய்ய வாய்ப்பு தந்தார். அதுதான் சினிமாவிலும் என் தடங்களைப் பதிக்க முதல் காரணம் .அவரிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன் .அதன் பின் வரிசையாக பல சினிமா வாய்ப்புகள் வந்தன .இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய 'மகாபிரபு' எனும் படத்துக்குத் தான் முதல் முறையாக வசனம் எழுதினேன் .படம் வெற்றி பெற்றது என் பயணமும் தொடர்ந்தது .இதுவரை 25 படங்களில் வசனம் திரைக்கதை என பணி புரிந்துள்ளேன் .எனது 25 வது படமான 'காப்பான்' படத்தில் இயக்குனர் கே வி ஆனந்த்துடன் இணைந்து கதை திரைக்கதையை உருவாக்கினேன் .தற்போது இரண்டு புதிய படங்கள் என் வசனத்தில் உருவாகி வருகிறது.

சின்னத்திரையில் உங்கள் பங்களிப்பு ?
பாக்யராஜ் சாரிடம் இருந்த போதே தொலைக்காட்சி வாய்ப்புகளும் வந்தன .அப்போது சீரியல்கள் அறிமுகமாகி கொடிகட்டிப் பறந்த நேரம் .பிரபலமான சத்யஜோதி நிறுவனத்திலிருந்து இயக்குனர் மனோபாலாவின் மெகாத்தொடருக்கு திரைக்கதை வசனம் எழுத நல்ல வாய்ப்பு கிடைத்தது . 72 வாரங்கள் வந்த அந்த தொடர் பெரிய வெற்றி பெறவும் வெவ்வேறு தொடர்களில் பணியில் இருந்தாலும் தொடர்ந்து 5 மெகாத்தொடர்களை அதே நிறுவனத்திற்காக செய்தது மறக்க முடியாத அனுபவம் .பாலு மகேந்திராவின் கதை நேரம் போன்றவைகளும் பெரிய வரவேற்பை பெற்ற கதைகள் .சுமார் 1500 பகுதிகள் சின்னத்திரையில் என் கதையாக்கத்தில் வெளிவந்துள்ளது . தற்போது சின்னத்திரைக்கும் எனக்கும் சற்று இடைவெளி வந்துள்ளது. காரணம் பெரியதிரை மற்றும் எழுத்துப் பணிகள் ..

சினிமாவிற்கும் எழுத்துக்கும் வித்யாசம் உண்டா ?
கண்டிப்பாக உண்டு .இரண்டுமே வேறு வேறு தளங்கள் .ஒரு சினிமாவிற்கும் நாவலுக்கும் கதைகள் அடிப்படை என்றாலும் என் நாவலுக்கு நான் மட்டுமே சர்வாதிகாரி. என் எழுத்தில் எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் .அது என் விருப்பம் .என் ஒருவனின் கற்பனைக்கு உட்பட்டது .முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருப்பது எழுத்து.

ஆனால், சினிமா அப்படி இல்லை அது பல கலைஞர்கள் இணைந்த ஒரு கூட்டு முயற்சி. அந்தக் குழுவில் நானும் ஒருவன் .ஏனெனில் ஒரு சினிமா என்பது இயக்குனரின் தலைமையில் இயக்கப்படுவது ..நடிகர் முதல் இசையமைப்பாளர் வரை அனைவரும் இயக்குனரின் கீழ் அவர் எண்ணத்தை வடிவமைப்பவர்களே..உதாரணமாக நீங்கள் வீட்டில் உங்கள் விருப்பத்திற்கு இருப்பதுபோல் உங்கள் அலுவலகத்தில் இருக்க முடியுமா?சுருக்கமாக சொன்னால் எழுத்து என்பது நான் சினிமா என்பது நாம்! .அவ்வளவே .இதை புரிந்து கொண்டால் எழுத்தாளர்களும் சினிமாவில் சாதிக்கலாம்.

சினிமாவில் கதைகளை மாற்றி விடுகிறார்கள் எனும் கருத்து எழுத்தாளர்களிடம் நிலவுகிறதே ?
திரைக்கதை பற்றிய புரிதல் இல்லாததாலேயே இந்த நிலைமை ..என் கதையே திரைக்கதையாகும் போது எப்படி மாறும் என்பதை கற்றுக்கொண்டதால் என்னால் புரிந்துகொள்ள முடியும் ஜெயகாந்தனின் கதைதான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ..அனுராதா ரமணனின் கதைதான் 'சிறை'..ஏன் தற்போது வெற்றிமாறன் எடுத்த 'விசாரணை' 'அசுரன்' இப்படி நிறைய வெற்றிப்படங்கள் வந்துள்ளதே ? தங்களது கதைகளை மட்டும் திரைப்படமாக்கும் உரிமையைத் தந்து அதை திரையில் பார்த்து ரசிக்கும் எழுத்தாளர்கள் உண்டு இங்கே எழுத்தாளர்களின் .தரமான கதைகள் வர்த்தகரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதை அறிவோம் .

கதையில் எழுதும் வர்ணனைகளை அப்படியே காண்பித்தால் மக்கள் எழுந்து ஓடி விடுவார்கள் எழுத்தில் காலைப்பொழுது புலர்ந்தது ..மலர்ந்தது செங்காந்தள் மலர் .உதித்தது தகதகக்கும் சூரியன்..தெருக்களில் பாவையர் வாசல் தெளித்துக் கோலமிட பசு ஒன்று மா என்று அழைத்தது .. என்று இரண்டு பக்கம் வர்ணிப்பதை பாலுமகேந்திரா ஒரே ஷாட்டில் காண்பித்து விடுவார் . கதையும் காட்சிப்படுத்துவதும் தனித்தனி இலக்கணங்கள்..புரிந்து இறங்கினால் சினிமா எழுத்தாளர்களுக்கும் இனிக்கும் இடமாகும்.

சில எழுத்தாளர்கள் சினிமாவில் முடிந்தவரை முயற்சி செய்து ஏதோவொரு காரணத்தினால் அதற்குள் வரமுடியாமல் தவிர்ப்பார்கள் .அவர்களுக்கும் உள்ளுக்குள் கண்டிப்பாக விருப்பம் இருக்கும் .ஆனால் சூழல்கள் ஒத்துழைக்காததால் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுங்கி சினிமாவை குறை சொல்வதும் உண்டு.

முகநூலிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறீர்கள் …முகநூல் போன்ற இணையதளங்கள் இன்று அதிகரித்து வருவது குறித்த தங்கள் பார்வை ?
எல்லாக் காலத்திலும் மாற்றங்கள் வருவதை ஏற்றுக்கொண்டால்தான் நம் முன்னேற்றங்களும் அதிகரிக்கும் .எந்த ஒரு விஷயத்தையும் நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் அதன் நன்மையும் தீமையும் அடங்கியுள்ளது. .உதாரணமாக ஒரு தீக்குச்சி விளக்கேற்றி ஒளியையும் தரும் அழிவுக்கும் வழிவகுக்கும் .அதற்காக தீக்குச்சியை வேண்டாமென்று ஒதுக்கி விட முடியுமா ? அப்படித்தான் இந்த விஞ்ஞான முன்னேற்றங்களும் .முதன் முதலில் சினிமாவைத் தயாரித்த போது அதற்கு எத்தனை எதிர்ப்புகள் எழுந்திருக்கும் ?இப்போது சினிமா என்பது நம் வாழ்வின் அசைக்கமுடியாத அங்கமாகி விட்டது .

முகநூல் போன்றவைகளும் அப்படித்தான் .நீங்கள் உங்களுக்காகவே துவங்கியிருக்கும் பத்திரிகை எனலாம் .அவரவர் மனதில் உள்ள கருத்துகளை யார் அனுமதியும் இன்றி வெளியிட கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் .நீங்கள் வெளியிடும் கருத்துகள் நீங்கள் எப்படிப்பட்டவரென்று  இந்த உலகுக்கு சொல்லிவிடும் . ஆகவேதான் வார்த்தைகளிலும் பதிவுகளிலும் கண்ணியத்துடன் தனி மனித ஒழுக்கமும் இங்கு அவசியமாகிறது ..இதன் மூலம் நீங்கள் நினைத்தால் நல்லதும் செய்யலாம் என்பதற்கு உதாரணம் இந்த பெருந்தொற்று நேரங்களிலும் பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு கிடைத்த பேருதவிகள் .எங்குதான் பிரச்சினைகள் இல்லை ?எந்த ஒரு புது விஷயமும் சற்று பயத்தை தரும் என்றாலும் நாம் பார்க்கும் நேர்மறைப் பார்வைகளால் அந்த விஷயத்தை ஆக்கபூர்வமாக மாற்றும் சக்தியும் நம்மிடமே உள்ளது . நமக்கு வேண்டிய நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பயணித்தால் முகநூலும் நன்மையே தரும் .

முகநூல் எழுத்தாளர்கள் பெருகி விட்டார்களே ?
வரவேற்கிறேன் .எந்த ஒரு துறையிலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் இது இரண்டுமின்றி தன் திருப்திக்காகவும் செயல்படுபவர்கள் என்று பிரிக்கலாம் அப்படி இங்கு வருபவர்களையும்  இந்த மூன்று பிரிவிற்குள் அடக்கலாம் ..தங்கள் மனதில் உள்ளவற்றை எழுதும் வாய்ப்பாக இந்த முகநூல் ஒரு வரம் என்றே சொல்லலாம் .யாரும் யாரையும் இங்கு கட்டாயப்படுத்த முடியாது .உங்கள் எழுத்தின் தரம் நன்றாக இருந்தால் அங்கீகாரம் கிடைக்கும் .முதலில் சொன்னது போல் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் வெளியிட அவரவர் ஏற்படுத்திக் கொண்ட பத்திரிக்கை முகநூல் எனலாம் .

நீங்கள் கூறும் சினிமா விமர்சனங்கள் சில சமயங்களில் சர்ச்சையைக் கிளப்பி விடுகிறதே ?
என்னைப் பொறுத்தவரை சமூகமோ சினிமாவோ என் பார்வையில் என்ன தோன்றுகிறதோ அதைத்தான் மனசாட்சிக்கு விரோதமின்றி சொல்கிறேன் .இதில் என்ன தவறு ? ஆம் .நானும் சினிமாவில் உள்ளேன் .அதற்காக அதில் வரும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருந்தால் நான் நல்லவனாகி விடுவேனா ? அது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் ஆயிற்றே ? நம்ம வீட்டுப் பையன் தப்பு பண்ணினா கண்டிக்கிறதில்லையா ? அது அந்தப் பையனின் வளர்ச்சிக்கு உதவுமே அன்றி கண்டிக்கவே கூடாது என்று சொல்பவர்கள் பற்றி நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும் ?

சமீபத்தில் மதங்களின் பெயராலும் ஜாதிகளின் வழியாகவும் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவது குறித்து ?
ஜாதியும் மதமும் ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரம் .பிறப்பால் நிகழ்பவை இவைகள் .படித்து பட்டம் வாங்கி நிகழ்த்துபவை அல்ல .இதில் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல தாழ்ந்தவர்களும் அல்ல .இது என் மதம் இது என் ஜாதி என பெருமை கொள்ள என்ன இருக்கிறது என்று புரியவில்லை ..அந்தக் காலத்தில் சில ஜாதியினருக்கு மறுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் இப்போது அனைவருக்கும் கிடைத்து சமமாக்கி உள்ளது .ஜாதியையும் மதத்தையும் மையப்படுத்தி நிகழும் எந்த வன்முறை  சம்பவங்களையும் கண்டிக்கிறேன் .

அதே போல் எந்த மதமானாலும் 'நான் கடவுளின் பிரதிநிதி' எனக் கூறும் எவரும் நேர்மையானவர் அல்ல .போலித்தனமானவர்கள்..மக்களை திசை திருப்புபவர்கள் .. .கடவுளை சென்றடைய விரும்புபவர்களுக்கு தக்க வழிகாட்டியாக நல்ல குரு இருக்கலாமே தவிர இவர்களைப் போன்ற ஏமாற்றுப்பேர்வழிகளை ஏற்றுக்கொள்ள முடியாது . மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் தெய்வங்கள் நம் பெற்றோர் .நம் வாழ்விற்கு வழிகாட்டும் ஆசிரியர் எவராக இருந்தாலும் அவரே குரு ஆவார் .எனக்கு எழுத வாய்ப்பு தந்த என் குருவான ஆசிரியர் சாவி போல …

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சமூக சீரழிவுகள் பெருகிவரக் காரணம் மற்றும் தீர்வு என்ன ?
பாலியல் அத்து மீறல்களோ சமூக சீரழிவுகளோ எந்த ஒரு விஷயத்திற்கும் தனி மனித ஒழுக்கமே அடிப்படை .சினிமாவும் இணையதளங்களும் தான் காரணம் என்று சொல்பவர்களுக்கு என் பதில் . இந்த விஷயங்கள் அனைத்தும் திடீரென்று இப்போது மட்டும் தோன்ற வில்லை .சினிமா இல்லாத ஆதி காலத்தில் இருந்தே இவைகள் அனைத்தும் அரங்கேறி உள்ளது .என்ன.. அப்போது விஷயங்களை உடனுக்குடன் காட்டும் மீடியாக்கள் இல்லை .இப்போது வெளியே தெரிவதால் ஆஹா சமூகம் சீரழிகிறதே என பதறுகிறோம் .சாட்சிக்கு 2000 வருசங்களுக்கு முன்பே வள்ளுவர் 'பிறன்மனை நோக்காதே' என்று சொல்லி இருக்கிறாரே ? அன்றிலிருந்து இன்று வரை போர்க்காலத்தில் பாதிக்கப் படுவது பெண்களின் கற்புதானே ? ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பார்வைகள் உண்டு .உங்களுக்குத் தவறாக தெரிபவை மற்றவரின் சூழலுக்கு சரியாகத் தோன்றலாம் .அமெரிக்காவின் கலாச்சாரத்தை இங்கு நாம் ஏற்பதில்லை ..அப்படித்தான் ..இங்கு மாற வேண்டியது தனி மனிதனின் மனதின் பக்குவம் மட்டுமே .

இதற்கான தீர்வு பெற்றோரிடத்தில் இருந்தே துவங்குகிறது .நம் பையன் நன்றாக படிக்கிறானா எனபதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவனுடன் பழகும் நட்புகள் யார், என்ன செய்கிறார்கள் என்பது போன்ற விபரங்களையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் .வயதுக்கு வந்த பிள்ளைகளை கண்காணிப்பது கண்டிப்பாக தவறாகாது .நீங்கள் இப்போது கண்டித்து வளர்க்கவில்லையெனில் பின்னாளில் உங்கள் பிள்ளைகளின் தவறால் சமூகம் உங்களைக் கண்டித்துவிடும் வாய்ப்பை நீங்களே உருவாக்கித் தந்து தலைகுனிகிறீர்கள் .ஆகவே பிள்ளைகளை கண்டித்து வளர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு .

வெற்றி என்பதற்கு என்ன அர்த்தம் ?
அவரவர் எண்ணங்கள் நிறைவேறினால் அதுவே வெற்றி .இன்னொன்று வெற்றி என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் செயலிலும் மாறுபடும் . எனது பார்வையில் வெற்றி என்பது மற்றவர்க்கு தேவையற்ற ஒன்றாக இருக்கலாம் .இருந்தாலும் பொறுமையும் முயற்சியும் காத்திருத்தலுமே  வெற்றிக்கு முதல்படி என்பது என் கருத்து.

உங்கள் குடும்பம் குறித்து ?
என் மனைவி சாந்தி .என் அத்துனை செயல்களுக்கும் துணையாக நிற்பவர் .மகள்கள் இருவர் .இருவரும் மீடியாக் கல்விதான் பயின்றார்கள் .தற்போது இருவருக்கும் திருமணமாகி விட்டது .அவர்கள் மூலம் இரண்டு பேத்திகள் ஒரு பேரனுக்கு நான் தாத்தாவாகி உயர்பதவியை பெற்றுள்ளது மகிழ்ச்சி .

சிரிக்கிறார் இளம் வயது போல் தோற்றமளிக்கும் தாத்தா. பிசியான வேளையிலும் .நமது கேள்விகளுக்கு பொறுமையாக பதில் தந்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு நமது நன்றிகளை சொல்லி விடைபெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com