முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

டெல்லியில்  முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அமைச்சர்கள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 8 ம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படை தளபதிகள், இராணுவ அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. படுகாயமடைந்த வருண் சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூரூ அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள வீட்டில் பிபின் ராவத், மனைவி மதுலிகா உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். பாஜகவின் தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் குஷ்பு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com