முச்சக்தி ரூப வைஷ்ணவி தேவி!

முச்சக்தி ரூப வைஷ்ணவி தேவி!
Published on

4

ராஜி ராதா

ம்முகாஷ்மீர், ரெய்சா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் கத்ரா. இங்கிருந்து பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில், மலை குகை ஒன்றில் வைஷ்ணவி தேவி குடிகொண்டுள்ளார். இந்தப் பகுதியை, 'திரிகுடா' என அழைக்கின்றனர். இதனால் வைஷ்ணவி தேவிக்கு, 'திரிகுடா தேவி' எனவும் செல்லப் பெயருண்டு.

தென்னிந்தியாவில், குழந்தை பாக்கியம் இல்லாது மனம் வருந்திய ரத்னாகர் சாகர் சம்ரிதிக்கு முப்பெரும் தேவியரின் கருணையால் பெண் குழந்தையாக அம்பிகை அவதரித்தார். பெற்றோர் அவளுக்கு, 'வைஷ்ணவி' எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

வைஷ்ணவி இளம் வயதிலேயே, ஸ்ரீராமனை தனது இஷ்ட மணாளனாக வரித்துக்கொண்டு வளர்ந்ததால், ஒன்பது வயதில் பெற்றோரிடம் அனுமதி பெற்று கடற்கரையருகே ஸ்ரீராமனைக் குறித்துத் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

ப்போது ஸ்ரீராமர், லட்சுமணர் வானரப் படையுடன் சீதையைத் தேடி அங்கே வந்தனர். ஒரு பெண் தீவிரமாய் தவம் செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ஸ்ரீராமர். அதேசமயம் வைஷ்ணவியும் எதேச்சையாய் கண்களைத் திறந்தாள். தன்னுடைய மானசீக மணாளர் தம் எதிரில் நிற்பதைக் கண்டாள். உடனே உணர்ச்சி வயப்பட்டு ஸ்ரீராமரிடம், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கூறினார்.

ஸ்ரீராமர் அதனை மறுத்து, ''இந்தப் பிறவியில் நான் ஏகபத்தினி விரதனாக சீதையை மட்டுமே மனைவியாக ஏற்றவன்! இருந்தாலும் உனது ஆசை, வருங்காலத்தில் நிறைவேற்றப்படும்! இதற்காக நான் கல்கி அவதாரம் எடுத்து வரும்போது, உன்னைத் தேடி வந்து மணப்பேன். ஆனால், அதுவரை நீ இங்கு தவம் செய்யத் தேவையில்லை. இமயத்தில் திரிகுடா மலையில் உள்ள ஒரு குகையில் தவம் செய்து வா! அங்கு உனக்கு சிரமமோ மற்ற பிரச்னைகளோ எழுந்தால், உன்னை அருவமாக மாற்றிக்கொண்டு எனக்காகக் காத்திரு…!'' எனக் கூறிவிட்டு, ஸ்ரீராமர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

வைஷ்ணவியும் நடந்ததை பெற்றோரிடம் கூறி, திரிகுடா மலைக்குச் சென்று கடும் தவத்தில் ஈடுபட்டார். மானிடர்களால் இடர்கள் வந்தபோது தன்னை அருவமாக (பின்டியாக) மாற்றிக்கொண்டார். முப்பெரும் தேவியர் உருவாக்கிய உருவமாயிற்றே. அதனை நினைவூட்டும் விதமாக மூன்று சூலங்களைப் பிரதிபலிக்கும் மூன்று கூர்மையான கற்களாக (சுயம்புவாக) குகையில் இன்றும் உறைந்து வருகிறார் வைஷ்ணவி தேவி.

வைஷ்ணவிக்கு, ஸ்ரீராமர் 'கல்கி அவதாரத்தில் உன்னைத் தேடி வந்து மணப்பேன்' என எப்ப்டிக் கூறினாரோ, அதேபோல் நாமும் நம்முடைய கோரிக்கைகளை, வைஷ்ணவி தேவியிடம் சமர்ப்பித்தால் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை வடநாட்டு மக்களிடையே இன்றும் நிலவுகிறது.

னி, வைஷ்ணவி தேவியை திரிகுடா மலைக் குகையில் எப்படி தரிசிப்பது எனப் பார்ப்போம். நாம் நினைத்தவுடன் மலை ஏறிச் செல்ல இயலாது. அதற்கு தேவஸ்தானத்தின் முன் அனுமதிச் சீட்டு பெற வேண்டும். ஒரேசமயத்தில் மலையில் 22,000 பேர் மட்டுமே அதிகபட்சமாய் இருக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆக, இதனைப் பராமரிக்கும் விதமாக, திரும்பி வருபவர்களுக்கு ஏதுவாகவே, மலை ஏற டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த மலைக்கு காஷ்மீர் தீவிரவாதிகளால் எப்போதும் தொல்லை உண்டு என்பதால், வழி நெடுகிலும் தேவஸ்தான படை மற்றும் மாநில, மத்தியப் படையினரின் நடமாட்டம் இருந்து கொண்டிருப்பதைக் காணலாம்.


மலை ஏற துவார பகுதியில்
, டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிக்க வேண்டும். மலைக்கு நடந்தே செல்லலாம். வேண்டுதலுக்காக பலரும் மலைக்கு நடந்தேதான் வருகிறார்கள். மட்டக் குதிரைகளும் சவாரிக்குக் கிடைக்கும். மேலே செல்ல ஆயிரம் ரூபாய் கட்டணம். டோலி வசதியும் உண்டு. இது தவிர, மலையை அடைய ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. அதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

மொத்தமாக பத்து கிலோ மீட்டர் மலை ஏற்றம்; இரண்டு கிலோ மீட்டர் இறக்கம். ஹெலிகாப்டரில் பயணித்தாலும், அது சென்று சேரும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டியிருக்கும்.

அலுப்பே தெரியாது. சாரைசாரையாக மக்கள் சென்றுகொண்டேயிருப்பார்கள். இருபுறமும் தடுப்பு வேலி உண்டு. வழி நெடுக ஓய்வெடுக்க வசதி, சிற்றுண்டி நிலையங்கள், கழிப்பறை வசதிகள் உண்டு! மேலும், வழியெங்கும் அவசர மருத்துவ உதவி வசதிகளும் உண்டு.

லை ஏற்றத்தின் வழியில் முப்பது மீட்டர் நீளத்தில் 1.5 மீட்டர் உயரத்தில் ஒரு குகையைக் காணலாம். அதன் முடிவில், மூன்று பாறைகள் சுயம்புவாகக் காட்சி தருகின்றன. இந்த பாறைகளில் இடதுபுறம் சரஸ்வதி, நடுவில் மகாலட்சுமி மற்றும் வலப்புறம் துர்கை என பூசாரி கூறுகிறார். அவை நன்கு தெரியும்படி அலங்கரிக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவி தேவி எனப் பொதுவாக அழைக்கப்படும் சக்தி என்ற துர்கையை வழிபட்டபின், திரும்பிவிடக் கூடாது. அதற்கும் மேலே இரண்டரை கிலோ மீட்டர் உயரத்தில் மற்றொரு குகையில் பைரவரை தரிசிக்கலாம். இவரை, 'பைரவர் நாத்' என காஷ்மீர் மக்கள் அழைக்கின்றனர். வடநாட்டில் துர்கை இருக்கும் இடத்திலெல்லாம் பைரவருக்கும் சன்னிதி உண்டு. இங்கு பைரவரை தனியாக அமர்த்தியதற்குக் காரணம், வைஷ்ணவி முப்பெரும் தேவியின் அம்சம் என்பதாலும், கன்னி தெய்வம் என்பதாலும் பைரவருக்கும் இடம் அளித்திருக்கலாம். இருவரையும் தரிசித்தாலே முழு பலன்!

நாள் முழுவதும் பக்தர்கள், 'ஜெய்மாதா ஜீ' என கூறியபடியே மலை ஏறிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் வெய்யிலைத் தவிர்க்க அதிகாலையிலேயே மலை ஏற ஆரம்பித்து விடுகின்றனர். எப்பவும் வழி நெடுக, நல்ல சுத்தம் பராமரிக்கப்படுகிறது. வருடத்திற்கு சுமார் பத்து லட்சம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். வைஷ்ணவி தேவி விரும்பினால்தான், நாம் அவளை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கை இங்கு நிலவுகிறது.

ஜம்முவிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். கத்ராவில் தங்கும் வசதிகளும் உண்டு!

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com