
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சிறையில் உள்ள தனது மகளை பரோலில் விடுவிக்கக் கோரி நளினியின் தாயார் பத்மா, முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது:
நான் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறேன், என் இறுதி காலத்திலாவது என் மகள் நளினியுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் நளினி மன அழுத்தம் , உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். எனவே மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும்.
-இவ்வாறு நளினியின் தாயார் தன் மனுவில் கோரியிருந்தார். இதனையடுத்து தற்போது நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.