நற்கதி நல்கும் மஹாளயபட்சம்!

நற்கதி நல்கும் மஹாளயபட்சம்!

– ரேவதி பாலு

இந்த உலகத்தில் வாழ்ந்தபோது எத்தனைக் கிராதகனாக வாழ்நாளை கழித்தாலும், அவன் இறந்து 'பித்ரு' என்ற நிலையை அடைந்துவிட்டால், அவனிடமிருந்து அவனைச் சார்ந்தவர்களுக்குக் கிடைப்பது, மனமார்ந்த ஆசிர்வாதங்கள் மட்டும்தான். அந்த ஆசிர்வாதம் மிகுதியாகக் கிடைக்கும் நாட்கள் மாளயபட்ச தினங்களாகும். இந்த வருட மாளயபட்சம் செப்டம்பர் 21ஆம் தேதி முதல், அக்டோபர் 5ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. மாளய அமாவாசை அக்டோபர் 6ஆம் தேதியாகும். இனி, மாளயபட்சம் குறித்த சில தகவல்களைக் காண்போம்.

வருடந்தோறும் திவசத்தின்போது நாம் பித்ருக்களை இந்த லோகத்திற்கு அழைத்து, பிராமணர்கள் ரூபத்தில் அவர்களை ஆவாஹனம் செய்து உணவு கொடுத்து, திருப்திப்படுத்தி அனுப்புகிறோம். பொதுவாக, அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை உள்ள பதினைந்து நாட்களை, 'ஒரு பட்சம்' (சுக்ல பட்சம்) என்று கூறுவார்கள். அதேபோல், பௌர்ணமி யிலிருந்து அடுத்த அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்கள் ஒரு பட்சம் (கிருஷ்ண பட்சம்) எனப்படும். ஆனால், ஆவணி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதியிலிருந்து, அடுத்த அமாவாசை திதி வரை (மஹாளய அமாவாசை) பதினைந்து நாட்கள், 'மாளயபட்சம்' என்றே விசேஷமாக அழைக்கப்படுகிறது. இந்தப் பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாட்டுக்கென்றே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மாளயபட்சத்தின்போது எமதர்மராஜன் பித்ருக்களிடம், "போ! போய் உனது பிள்ளைகளை மனமார ஆசிர்வதித்து விட்டு வா!" என்று பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறான். ஆகவே, பித்ருக்கள் மாளயபட்சம் பதினைந்து நாட்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆசி வழங்கும் நோக்கத்தோடு பூலோகத்திலேயே தங்கி இருக்கிறார்கள். பதினைந்து நாட்களும் எள்ளும் தண்ணீரும் விட்டு மாளயபட்ச தர்ப்பணம் செய்து பித்ருக்களை மனம் குளிர்வித்து அனுப்பி வைக்க வேண்டுமாம். இதை பதினைந்து நாட்களும் செய்ய முடியாவிட்டாலும், தங்கள் தந்தையின் திதி தினத்தன்றாவது மாளயபட்சத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பீகார் மாநிலத்திலுள்ள, 'கயா புண்ய ஸ்தலம்' லட்சக்கணக்கான இந்துக்களால் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கே பித்ரு வழிபாட்டுக்கென்றே செல்பவர்களும் உண்டு. பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் செய்பவர்கள் கயாவில் விஷ்ணு பாதம் கோயிலில் முன்னோர் களுக்கு பிண்டம் போட்டு வழிபட்டு, பிறகு பல்குனி நதிக்கரையில் அக்னி வளர்த்து ஸ்ரார்த்தம் செய்து, கடைசியில் அக்ஷய வடத்திற்குச் சென்று அங்கே வாசம் செய்யும் பித்ருக்களுக்கு பிண்டம் போட வேண்டும்.

பீகார் மாநிலத்தில் மாளய அமாவாசை அரசு விடுமுறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. மாளயபட்ச தர்ப்பணம், மாளய அமாவாசை பித்ரு தின வழிபாடு ஆகியவற்றுக்கென்றே இந்தியா முழுவதிலுமிருந்தும் கயா செல்பவர்கள் உண்டு. அன்று பித்ரு வழிபாடு செய்பவர்கள் போடும் பிண்டங்கள் அந்த ஊர் முழுவதும் சிதறிக் கிடக்குமாம். 'அப்படியென்றால், எத்தனை ஆயிரம் மக்கள் அன்றைய தினம் அங்கே பித்ரு தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டிருப்பார்கள்' என்று நினைக்கவே, மெய் சிலிர்க்கிறது.

கயாவில் முக்கியமான நதியான கங்கையின் கிளை நதி, 'பல்குனி' வருடம் முழுவதும் வறண்டே இருக்கும். ஆனால், தோண்டினால் 'பாலாறு' போல ஊற்றுத் தண்ணீர் ஸ்படிகம் போலக் கிடைக்கிறது. அதில் நீராட முடியாததால் அந்தப் புனிதத் தீர்த்தத்தை சிரசு மீது தெளித்துக்கொண்டு திருப்தியடைய வேண்டியதுதான்.

கயாவில் ஒரு காலத்தில், 'கயாசுரன்' என்று ஒருவன் இருந்தானாம். அவன் விஷ்ணுவிடம், "என் உடலுக்கு ஒரு புனிதத்தன்மை இருக்க வேண்டும். என்னைத் தொடுபவர்களுக்கு நற்கதி கிடைத்து அவர்கள் சொர்க்கம் செல்ல வேண்டும்" என்று வரம் வாங்கியிருந்தானாம். இதனால் சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதாம். இதனால் தேவர்கள் கலங்கி விஷ்ணுவிடம் முறையிட, அவர் கயாசுரனிடம் அவனது உடலை யாகம் செய்ய, தானமாகக் கேட்டாராம். அவனும் மகிழ்வோடு அதற்கு ஒப்புக்கொண்டு, தனது உடலை மண்ணில் கிடத்தினானாம். வேள்வியின்போது அவன் உடல் ஆடிக்கொண்டேயிருக்க, விஷ்ணு தனது கதையை பயன்படுத்தி அந்த ஆட்டத்தை நிறுத்தினாராம்.

வேள்விக்கு அவன் தன்னை முழு மனதாக அர்ப்பணித்த விதம் தேவர்களின் உள்ளத்தைக் கவர, அவர்களே இறுதியில் ஒரு வரம் கேட்குமாறு அவனைப் பணித்தனர். 'அவன் தனக்கு முக்தியே கேட்பான்' என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது, "இந்த இடம் எனது பெயரால், 'கயை' என்னும் க்ஷேத்ரமாக விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டு ஸ்ரார்த்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்க வேண்டும்" என்று, அப்போதும் உலகத்தாரின் நன்மையை நினைத்தே வரம் கேட்டான். அவனது உயர்வான குணத்தைக் கண்டு அகமகிழ்ந்துபோன தேவர்கள் அவ்வாறே வரம் தந்தனர்.

கயாவில் மற்றொரு பிரசித்தி பெற்ற விஷயம், 'அக்ஷய வடம்' என்னும் ஆல விருட்சமாகும். இந்த விருட்சம் பிரயாகையில் ஆரம்பித்து, மத்தியப்பகுதி காசியில் கங்கை நதிக்கடியே வந்து, நுனிப்பகுதி மட்டுமே கயாவில் தெரிகிறது. எண்ணற்ற விழுதுகளுடன், யுக யுகமாக இருக்கும் புராதீனமான பிரம்மாண்டமான அக்ஷய வடத்தைப் பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது. அந்த இடத்தின் மிகப்பெரிய விசேஷம் என்னவென்றால், நம்மைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது, நமக்குத் தெரிந்தவர்கள் எவருக்குமே, நம் வீட்டில் உயிர் நீத்த வளர்ப்புப் பிராணிகள் உட்பட, அனைத்துத் தரப்பினருக்கும் பிண்டம் போட்டு அவர்களைக் கரையேற்ற முடியும் என்பதுதான். இங்கே பிண்டம் போட்டு வழிபாடு செய்தால், நம்முடைய இருபத்தொரு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்கள் நற்கதி அடைவார்களாம்.

இந்தப் புனிதமிகு மஹாளயபட்ச நாட்களில் அன்னதானம், வஸ்த்ர தானம் போன்ற எந்த நல்ல காரியங்கள் செய்தாலும் பித்ருக்களின் வாழ்த்துக்கள் கிடைக்கும். அந்த சமயத்தில் நாம் செய்யும் எந்த காரியத்திற்கும், உதாரணமாக ஒரு கோயிலுக்குப் போவது, விளக்கேற்றுவது, தான தர்மங்கள் செய்வது போன்ற எந்த ஒரு காரியத்திற்கும் தெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு பித்ருக்களின் ஆசிர்வாதமும் சேர்ந்தே கிடைக்கிறது. மாளயபட்சத்தில் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும் பித்ருக்களின் மனதை குளிர்வித்து வரங்களையும் வாழ்த்துக்களையும் நமக்குப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com