0,00 INR

No products in the cart.

அஹோபில நவ நரசிம்மர் தரிசனம்!

லதானந்த்

லுவலகம், வீடு, வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்ற அலுப்பான சுழற்சியிலேயே கழியும் வாழ்க்கையில் ஓர் அதிரடி மாற்றமாக அமைந்தது அஹோபிலப் பயணம். கான்கிரீட் காடுகளாக மாறிப்போன நகர வாழ்க்கையில் இருந்து சில நாட்களாவது விடுபட்டு நிஜக் காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்று நெடுநாட்களாக நண்பர்கள் சிலர் திட்டமிட்டிருந்தோம். அப்படிப்பட்ட ஒரு மலையேற்றப் பயணம் ஆன்மிகம் சார்ந்ததாகவும் இருந்தால் அது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் என்று சிந்தனை ஓடியது. அப்போது நாங்கள் தேர்வு செய்ததுதான் ஆந்திராவில் இருக்கும் அஹோபிலம்.

ன்னிரு ஆழ்வார்கள் பாடிப் பரவசம் அடைந்த திருத்தலங்கள் மொத்தம் 108. இவற்றை திவ்ய தேசங்கள் என்று வைணவப் பெருமக்கள் அழைப்பர். அவற்றில் பரமபதமும் பாற்கடலும் இந்தப் பூவுலகில் நாம் காண முடியாதன. ஏனைய 106 திவ்ய தேசங்களில் ஒன்றுதான் அண்டை மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் அஹோபிலம் என்னும் அழகிய திருத்தலம்.

நரசிம்மர் எழுந்தருளி இருக்கும் அஹோபிலத்தில் ஒன்பது கோலங்களில், ஒன்பது கோயில்களில், நரசிம்மர் காட்சி தருகிறார். மேலும், பிரகலாத வரதனாக பெரியதொரு ஆலயத்திலும் எழுந்தருளி இருக்கிறார் நரசிம்மர். தகுந்த திட்டமிடுதலுடன் போனால்தான் ஒன்பது நரசிம்மர் திருமேனிகளையும் ஒரே நாளில் கண்டு தரிசிக்க முடியும். ஒவ்வொரு மாதமும் வரும் ஸ்வாதி நட்சத்திரத்தன்றுதான் இந்த ஒன்பது கோயில்களும் ஒருசேரத் திறந்திருக்கும். ஏனைய நாட்களில் ஒருசில கோயில்களைத் தவிர, ஏனைய கோயில்கள் திறப்பது இல்லை. ஒரு ஸ்வாதி நட்சத்திரத்தில் நவ நரசிம்மர்களையும் தரிசிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அதோடு, மறக்க முடியாத டிரெக்கிங் அனுபவத்தையும் பெற்றோம்.

சென்னை, எழும்பூரில் இருந்து மாலை ஐந்து மணிக்குப் புறப்படும் கச்சகுடா எக்ஸ்பிரஸில் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10.15 மணிக்குக் கடப்பா சென்று அடைந்தோம். கடப்பாவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள அல்லகட்டா என்ற இடத்துக்குப் பேருந்தில் இரண்டு மணி நேரப் பயணம். அல்லகட்டா சிறிய ஊர் என்றாலும், தனியாரது தங்கும் விடுதி ஒன்று வசதியாக இருந்தது. காலை 6 மணிக்கு அல்லகட்டாவில் இருந்து 25 கி. மீ. தொலைவில் உள்ள அஹோபிலத்தைச் சென்று அடைந்தோம்.

ஹோபிலத்தில், சமதளத்தில் இருப்பதை, ‘கீழ் அஹோபிலம்’ என்றும், சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளதை, ‘மேல் அஹோபிலம்’ என்றும் இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

கீழ் அஹோபிலத்தில் பேருந்து நிற்கும் இடத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது பிரகலாத வரதன் ஆலயம். ஆலய தரிசனத்தை முடித்தபோது சரியாகக் காலை மணி எட்டு. வெயில் அதிகரிப்பதற்குள் மலைச் சிகரங்களுக்கு இடையில் பொதிந்திருக்கும் நரசிம்மரின் திருமேனிகளைத் தரிப்பதற்காக எங்கள் ஆன்மிக டிரெக்கிங் துவங்கியது. மேல் அஹோபிலத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலேயே இருப்பது க்ரோத நரசிம்மர் சன்னிதி. ஸ்வாதியை முன்னிட்டு வழியிலேயே பக்தர்களுக்கு சுடச்சுட காலை ஆகாரம் இலவசமாக வழங்கப்பட்டது.

வராஹ நரசிம்மரை சேவித்துவிட்டு, அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆற்றின் படுகையிலேயே சில கி.மீ. தூரம் நடந்த பிறகு படிகள் ஆரம்பிக்கின்றன. ஓங்கி உயர்ந்த மரங்கள், சில்லென்ற காற்று, மிக லேசான மழைத் தூறல் என்ற ரம்மியமான இந்தச் சூழலில் மலை ஏறும் அலுப்பே தெரியவில்லை. அவ்வப்போது பக்தர்கள் புன்முறுவலோடு, ‘கோவிந்த சரணம்’ சொல்லிக்கொண்டே பயணத்தை மேலும் லகுவாக்குகின்றனர். ஆங்காங்கே சிறு பாலங்கள், ஓடைகளின் மெல்லிய ஓசை, பட்சிகளின் ரீங்காரம், மனம் எங்கும் ததும்பி வழியும் நரசிம்ம நாமம் என புனிதமும், இயற்கையும் இணைந்த அதியற்புதமான டிரெக்கிங் அது. படிகளில் ஏறியதும், நீர் வழியும் பாறைகளின் ஊடாகக் கொஞ்ச தூரம் போனவுடன் குகைக் கோயிலில் அமர்ந்திருக்கும் ஜுவாலா நரசிம்மர் திவ்ய தரிசனம் தந்தார்.

அங்கிருந்து வந்த வழியிலேயே நிதானமாகக் கொஞ்ச தூரம் இறங்கி வந்ததும் கிளை பிரியும் இன்னொரு மலைப் பாதையில் மீண்டும் படிகளின் ஊடாகப் பயணம் செய்தால், அரை மணி நேரத்துக்குள்ளாகவே அழகான சூழ்நிலையில் அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் ஆலயம். ‘மா’ என்றால் திருமகள். திருமகள் நேசன் என்ற பொருளில் இங்குள்ள நரசிம்மர் மாலோலன் என்று அழைக்கப்படுகிறார்.

றக்குறைய இரண்டு மணி நேரம் அனுமதி கெடுபிடிகள் இன்றி, பக்தர்கள் பலரும் உடன் வர, இந்த மலை நடைப் பயணத்தை மேற்கொள்வது கண்கொள்ளாக் காட்சி. அங்கே தரிசனம் முடிந்தது. வேறொரு பாதையின் வழியாகக் கீழிறங்கினால் நாம் புறப்பட்ட மேல் அஹோபிலத்துக்கு அது நம்மை இட்டுச் செல்கிறது. மேல் அஹோபிலத்தில் குகை போன்ற அமைப்பில் எழுந்தருளியிருக்கிறார் அஹோபில நரசிம்ம ஸ்வாமி. ஸ்வாதி நட்சத்திரம் என்பதால் இங்கே வரிசையில் ஒரு மணி நேரம் நின்ற பிறகே தரிசனம் கிடைத்தது.

இதற்குள் மதியம் மணி ஒன்று ஆகி இருந்தது. பக்தர்களுக்குச் சுவையான மதிய உணவும் பாயசமும் இலவசமாக வழங்குகிறார்கள். திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு கீழ் அஹோபிலம் நோக்கிப் புறப்பட்டோம். வரும் வழியிலேயே இருக்கிறார் காரஞ்ச நரசிம்மர். அவரையும் சேவித்துவிட்டு வந்தோம்.

கீழ் அஹோபிலத்தில் ஓர் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பார்க்கவ நரசிம்மர், யோகானந்த நரசிம்மர் மற்றும் சக்ரவட நரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்மர்களைத் தரிசித்தோம். பார்க்கவ நரசிம்மர் ஆலயம் அடர்ந்த கானகத்துக்குள் அமைந்திருக்கிறது. ஆட்டோ மற்றும் ஜீப் தவிர வேறு வாகனங்கள் செல்வது மிகவும் கடினம். குண்டும் குழியுமான பாதை. அதன் முடிவில் அழகிய ஒரு குளம். அதன் பெயர் அக்‌ஷய தீர்த்தம். குளத்தை ஒட்டிய ரம்மியமான சிறு குன்று. அதில் ஏறிச் செல்ல 132 படிகள். படிகளின் முடிவில் உள்ள சிறு ஆலயத்தில் அழகுற அருள்பாலிக்கிறார் பார்க்கவர். ‘என்னைப் பார்க்க வா’ என்றழைத்த பார்க்கவ நர்சிம்மரைப் பார்த்துவிட்டு, அதே ஆட்டோவில் யோகானந்த நரசிம்மர் மற்றும் சக்ரவட நரசிம்மர் ஆகியோரைக் கண் குளிரத் தரிசித்தோம்.

இன்னும் தரிசிக்க வேண்டியவர் பாவன நரசிம்மர் மட்டுமே. இவரது ஆலயம் கீழ் அஹோபிலத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மேல் அஹோபிலத்தில் இருந்து 7 கி.மீ. நடைப் பயணத்திலும் இந்தக் கோயிலை அடையலாம். ஆனால், அனைத்துக் கோயில்களையும் அன்றே தரிசிக்க முடியாது என்பதாலும், ஸ்வாதி நட்சத்திரத்தன்று மட்டுமே கோயில்கள் திறந்திருக்கும் என்பதாலும் நாங்கள் கீழ் அஹோபிலத்தில் இருந்து ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம். சுமார் இரண்டு மணி நேரப் பயணம். இதுவும் காட்டுக்குள்தான். அருமையான எழில் சூழ்ந்த மலைகளின் மடியில் அமைதியாகக் கொலுவிருக்கும் பாவன நரசிம்மரின் சன்னிதியில் மனமுருகி நின்றோம். மீண்டும் அஹோபிலம் வரும்போது மாலை 7 மணியாகி விட்டிருந்தது. வந்து சேர்ந்த அதே மார்க்கத்தில் அல்லகட்டா சென்று இரவு தங்கிவிட்டுக் காலை 9 மணிக்குக் கடப்பா ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். 10 மணிக்கு மும்பையில் இருந்து வந்த சென்னை எக்ஸ்பிரஸில் ஏறி, பிற்பகல் இனிதே சென்னை வந்து சேர்ந்தோம்.

பயண இடங்களும் நேரமும் : சென்னை கடப்பா 258 கி.மீ., 5.15 மணி. கடப்பா அல்லகட்டா 80 கி.மீ., 2 மணி. அல்லகட்டாஅஹோபிலம் 24 கி.மீ 30 நிமிடம்.

நன்றி புகைப்படங்கள் : http://narasimhar.blogspot.in/2010/02/10

 

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

​அம்பிகையின் அருள்!

0
- வி.ரத்தினா, ஹைதராபாத் எனது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார்....

இறைவன் ஏற்கும் விசேஷ நிவேதனங்கள்!

0
lகொல்லூர், ஸ்ரீ மூகாம்பிகைக்கு இரவு அர்த்த ஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. lசிதம்பரம், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா...

​பலன் தரும் ஸ்லோகங்கள்!

0
- எம்.வசந்தா ​உடல் உஷ்ணம் குணமாக... ‘பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம’ பொருள் :...

​தீபப் பலன்!

1
- பொ.பாலாஜிகணேஷ் ‘விளக்கேற்றிய வீடு வீண் போகாது’ என்று கூறுவர். தீபச் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச் சுற்றி பாசிடிவ் எனர்ஜி...

​கடவுள் தரிசனம்!

0
- சுந்தரி காந்தி துறவி ஒருவர் ஆற்றில் நீராடிவிட்டு, கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இதை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். நீண்ட நேரம் கழித்து துறவி தியானம் கலைந்து...