உத்தம திருடர்கள் பராக்.. சைபர் கிரைம்கள்..உஷார்!

உத்தம திருடர்கள் பராக்.. சைபர் கிரைம்கள்..உஷார்!

நெட்பிளிக்ஸில் ஜம்தாரா என்று ஒரு தொடர் உலாவி கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் மொபைல் போன் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களிடம் நைச்சியமாக பேசி பணத்தை களவாடுவார்கள். ஆம்! நிஜத்திலும் பெரும்பாலான திருட்டுக்கள் இப்படிதான் நடக்கிறது. உங்களுக்கு தெரியாமல் உங்களை பயன்படுத்தும் சைக்காலஜி இந்த சைபர் கிரைம் திருட்டில் அதிகம்.

இந்த வினாடியில் யாருடைய வங்கியிலிருந்தோ யாரோ ஒருவன் பணத்தை களவாடி கொண்டிருக்கலாம். எவனோ ஒருவன் ஏதோ  ஒரு பெண்ணின் படத்தை மார்பிங் செய்து, அதை நெட்டில் போடப் போவதாக மிரட்டி கொண்டிருக்கலாம், யாரோ ஒருத்தி இனிக்க இனிக்க யாருடனோ பேசி OTP அனுப்பி, அவன் பணத்தை ஸ்வாகா செய்து கொண்டிருக்கலாம்.. இந்தியாவில் வசிக்கும் உங்களது கடன் அட்டை மலேசியாவில் பயன்படுத்தப்பட்டு பெரிய தொகையை  உருவி எடுத்த செய்தி உங்களை கலவரப் படுத்தலாம்.

இப்படி குற்றங்களை அடுக்கிகொண்டே போகலாம். இதை படிக்கும் போதே உங்களுக்கு தோன்றலாம். ஆஹா! இஹெல்லாம் சைபர் கிரைம் வகையாயிற்றே? கரெக்ட்! ஆனால் சைபர் கிரைம் பற்றிய செய்திகள் மக்களிடம் சென்றடைந்த அளவிற்கு அதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்கவில்லை. அநியாயத்துக்கு ஏமாந்து அவலப்படும் நிலை பலருக்கு இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் சுமார் 27 மில்லியன் நபர்கள் இந்தமாதிரி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் 52 சதவீதம் பேருக்கு இதிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துகொள்வது என்று தெரியவில்லை என்கிறது அந்த ஆய்வு.  2020 ஆண்டு புள்ளிவிவரப்படி உத்திரபிரதேசத்தில் 11097 குற்றங்களும், குறைந்தபட்சமாக  சிக்கிமில் 7 குற்றங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 782 சைபர் குற்றங்கள் நடந்திருப்பதாக கூறுகிறது தேசிய குற்றப்பதிவு ஆவணகாப்பகம். குறிப்பாக  இந்த லாக்டவுன் காலக்கட்டத்தில் வீட்டில் அடைந்து கிடக்கும் மக்கள் எப்படியாவது அதிகம் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற பேராசையில் ''நொடியில் கோடீஸ்வரன்" வகை அழைப்புகளுக்கு இசைந்து இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுத்துள்ளனர்.

சைபர் குற்றம் என்பது ஏதோ வங்கியில் இருந்து பணத்தை திருடுவது மட்டுமல்ல தொலைபேசி வழியே அழைப்புவிடுத்து அச்சுறுத்துவது,மிரட்டுவது, ஒருவர் புகைப்படத்தை மாற்றி மிரட்டுவது, போலி மின்னஞ்சல், போலி டிஜிட்டல் கையெழுத்துக்கள், பிறரின் நற்பெயரை சமூக ஊடகங்கள் மூலம் சிதைப்பது, இன்னொருவர் கணக்கை திருடுவது  என்று பெரும் பட்டியல் தொடர்கிறது.

இத்தகைய குற்றங்களில் இருந்து எப்படி பாதுகாத்துகொள்வது என்பது குறித்து DiSAI  எனப்படும் டிஜிட்டல் செக்யூரிட்டி அமைப்பின் உறுப்பினர் திருமதி எஸ்.பஞ்சியிடம் பேசினோம்.

"பெரும்பாலான குற்றங்கள்  ஆசையை தூண்டுவதின் மூலமே நடைபெறுகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சீக்கிரம் பணம் சம்பாதிக்கவேண்டும். சொகுசான வாழ்க்கைய வாழவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. அதன் காரணமாக குற்றங்கள் நிகழ்கின்றன. இன்னொருபுறம் விழிப்புணர்வு அற்ற நிலையில் பலர் ஏமாறுகின்றனர். எது எப்படியாக இருந்தாலும் இந்த பத்து விஷயங்களை பின்பற்றினால் நிச்சயம் சைபர் குற்றங்களுக்கு இலக்காவதில் இருந்து தப்பிக்கலாம்'' என்று சொல்லத் தொடங்கினார்.

 1. இந்த உலகில் இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை. இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதை நிறுத்துங்கள் . இதன் மூலமே பெருமளவில் தகவல் சேகரிக்கப்பட்டு திருட்டுக்கு வழிவகையாகிறது.நாம் முக்கியமான விஷயங்களை செய்வதற்கு இலவச மென்பொருள்களை (Software) பயன்படுத்துவதை தவிர்ப்பது மிக அவசியம். குறிப்பாக இலவச இணையதளங்களில் உங்களின் முக்கியமான எந்த ஆவணங்களையும் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டாம். அவற்றை தரவு மோசடி(Hackers) செய்யப்பட வாய்ப்புண்டு.
 1. .பேராசை பெருநஷ்டம்! "நீங்கள் 3 கோடிகளை வென்றுள்ளீர்கள்"  என்று ஒரு மின்னஞ்சல் வரும். இது  உத்தம திருடர்களின் (Fraudster) கைவரிசை!. நீங்கள் அந்த செய்திக்கு பதிலளித்தால் போச்சு! அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி தங்கள் வீடு, மனை, தங்க நகைகளைகூட விற்று பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஏராளம் பேர்! 3 கோடி ரூபாய் உங்களுக்குக் கொடுப்பதாக கூறி, உங்களீடமிருந்து பல லட்சம் சுருட்டுவார்கள்ஃ
 1. உங்களுக்கு என்று பிரத்யோகமான பாஸ்வேர்ட் வைத்துகொள்ளுங்கள். அதனை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுங்கள்.
 1. கைப்பேசிகளை அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்க்கும் நிறுவனங்களில் மட்டும் ஒப்படையுங்கள். அப்படி கொடுக்கும் போது அதில் உள்ள தகவல்களை முற்றிலும் அழித்துவிட்டு கொடுக்கவேண்டும். அல்லது குறைந்தபட்சம், அதில் பதிவு செய்துள்ள தகவல்களுக்கான பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டு தரவேண்டும்.
 1. அவசியமின்றி உங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில்  பதிவிடாதீர்கள்.  புகைப்படங்களை மாற்றி  அதில் ஆபாசபடங்களை ஒட்டி செய்யும் பல குற்றங்கள் எங்கிருந்தோ திருடப்பட்ட புகைப்படங்களால் தான் பெரும்பாலும் நிகழ்கிறது
 1. கண்ட இடங்களில் வை-பை வயர்லெஸ் சேவைகளை பயன்படுத்துவதை தவிருங்கள்
 1. கடன் அட்டையில் உள்நுழைந்து  தேவையான பரிவர்த்தனை தொகைக்கு மட்டும் அனுமதி தந்து லாக் செய்யுங்கள். இதனால்  உங்கள் வங்கிகணக்கு கடன் அட்டை விவரம் திருடப்பட்டாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் திருடப்படுவதை தடுக்கமுடியும். அதே நேரம் பொதுவெளியில் வை-பை டாப் செய்து பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்
 1. வங்கி பெயரில் வரும் அழைப்புகளை கவனமாக அணுகுங்கள். எதையும் தொலைபேசி வழியே பகிர்ந்து கொள்ளவேண்டாம். சந்தேகம் எழுந்தால் உங்கள் வங்கிக்கு நேரடியாக தொடர்புகொண்டு விசாரியுங்கள்
 1. சைபர் குற்றங்களில் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கபடுகின்றனர். எனவே அவர்கள் சார்ந்த புகைப்படங்களை பொதுவெளியில் பதிவிடுவதைத் தவிருங்கள்.
 1.  முக்கியமான ஒன்று – எந்தவொரு குற்றமும் உங்கள் கவனகுறைவின்றி நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே ஏடிஎம், பொதுவெளி பரிவர்த்தனை, தொலைபேசி உரையாடல் என ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வுடன் இருப்பதே முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

சரி  ஏமாந்தபின்னர் யாரை அணுகுவது ?

நீங்கள் சைபர் கிரைமால் பாதிக்கப்பட்டால் உடனடியாக  புகார் அளிக்க தயக்கம் வேண்டாம். சைபர் குற்றங்கள் மூலம் பணத்தையோ பொருளையோ இழந்திருந்தால் உடனடியாக கட்டணமில்லா எண் 155260 அலைபேசியிலும் அல்லது  https://cybercrime.gov.in  என்ற தேசிய சைபர் குற்ற வலைத்தள முகவரியில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

மேலும் 14567 என்ற தொலைபேசி எண், முதியோர்களுக்காக இயங்கும் சிறப்பு சேவை. இதில் முதியோர்கள் அவர்களது  அனைத்து குறைகளையும் அளிக்கலாம். இதை தவிர அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்'' என்று விரிவாகச் சொல்லி முடித்தார் திருமதி. பஞ்சி.

இணையத்தைப் பாதுகாப்போடு பயன்படுத்துவோம்

. இணையதள கொள்ளையர்களிடம் விழிப்புணர்வோடு இருப்போம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com