இந்தோனேஷியாவின் புதிய தலைநகர் நுஸந்தரா!

இந்தோனேஷியாவின் புதிய தலைநகர் நுஸந்தரா!

– ஜி.எஸ்.எஸ்.

இந்தோனேஷியாவின் வருங்காலத் தலைநகராக நுஸந்தரா என்ற நகரை அறிவித்துள்ளது அந்நாடு. தற்போதைய தலைநகர் ஜாகர்த்தாவிலிருந்து இன்னும் இரண்டு வருடங்களில் ஒட்டுமொத்தமாக நுஸந்தராவுக்கு அனைத்து விஷயங்களும் மாற்றப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2019-லேயே இந்த மாற்றம் நடைபெறும் என்று தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.  ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று என்று ஆகிவிட்டது. அந்த நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் திட்டம் இது.  32 பில்லியன் டாலர் இந்த மாற்றத்திற்காக செலவழிக்கப்படுமாம்.

எதற்காக தலைநகரை மாற்ற வேண்டும்?  மிக அதிகமான மக்கள் தொகை, காற்று மிக அதிக அளவில் அசுத்தம் அடைந்தது ஆகியவற்றைத் தவிர வேறொரு முக்கிய காரணமும் உண்டு.  மிக அதிக அளவில் ஜகார்த்தாவில் வெள்ளம் ஏற்படத் தொடங்கி விட்டது. வெப்பநிலை மிக அதிகமாக மாற்றத்துக்கு உள்ளாகிறது.

முன்னொரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த ஜகார்த்தா   இன்று உலகின் பெரும் நகரங்களில் ஒன்று.  இஸ்லாமிய சுல்தான் ஒருவர் இந்த நகரை வெற்றி கொண்டபோது இதற்கு ஜயகர்த்தா (வெற்றி நகரம்) என்று பெயரிட்டார்.  அது பின்னர் ஜகார்த்தா ஆகிவிட்டது.   இன்று சாலைப் போக்குவரத்து நெரிசலால் திணறிக் கொண்டிருக்கிறது இந்த நகரம்.  இந்தோனேஷியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதம் பேர் ஜகார்த்தாவில் மட்டுமே வசிக்கிறார்கள்.  நாட்டின் பொருளாதார பரிவர்த்தனைகளில் சரிபாதி இந்த நகரில் மட்டுமே நடைபெறுகிறது

ஜாவா தீவில் அமைந்துள்ளது ஜகார்த்தா. ஜாவா  கடலுக்கு அருகில் உள்ள ஜகார்த்தா கொஞ்சம் வேகமாகவே புதைந்து கொண்டு வருகிறது.  இதற்கு ஒரு முக்கிய காரணம் கடலின் அருகாமை மட்டுமல்ல,  மிக மிக அதிகமாக தோண்டி எடுக்கப்படும் நிலத்தடி நீரும் கூட.  ​மூன்று கோடி மக்களுக்கும் அதிகமாக இந்த நகரில் வசிப்பதால் மிக அதிக நீர் தேவைப்படுகிறது.   தவிர எக்கச்சக்கமான ஷாப்பிங் மால்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் பெருகிக் கொண்டே போவதால் நகரம் புதைந்து போகும் வேகமும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  இதன் வடக்குப் பகுதி ஆண்டுக்கு 25 சென்டி மீட்டர் என்கிற அளவில் புதைந்து கொண்டிருக்கிறது.  அடுத்த முப்பது வருடங்களில், சேற்று நிலத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம் முழுவதுமாக கடலுக்குள் புதைந்து விடும் என்கிறார்கள்.

புதிய தலைநகராக விளங்கப் போகும் நுஸந்தரா என்பது போர்னியோ என்ற தீவில் உள்ள காளிமன்தன் என்ற காட்டுக்குள் இருக்கும் பிரம்மாண்டமான பகுதி.  கனிமப் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன

சரி நுஸந்தராவை எதற்காக தேர்ந்தெடுத்தார்கள்? ஜகார்த்தாவில் இருந்து வடகிழக்காக 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தப் பகுதி.   நுஸந்தரா என்றால் இந்தோனேசிய மொழியில் தீவுக்கூட்டம் என்று பொருள்.  2,561 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இது இருக்கிறது.  உலகின் மூன்றாவது மிகப்பெரிய தீவு.

இந்தோனேஷியாவின் மையப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.  அந்த நாட்டின் பல நகரங்களிலிருந்து இந்தப் பகுதியை எளிதில் அடைய முடியும்.    ஜகார்த்தாவைப்  போல நான்கு மடங்கு பெரியது காளிமந்தன்.

பிரேசில் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் தங்கள் தலைநகரை மாற்றிக் கொண்டபோது பின்பற்றிய வழிமுறைகளை இப்போது இந்தோனேஷியா கடைபிடிக்கப் போகிற்தாம். நுஸந்தராவுக்கு தலைநகர் மாற்றப்பட்டாலும் இந்தோனேஷியாவின் வணிக மையமாக ஜகார்த்தா தொடருமாம்.  அதில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் குடியிருப்பை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

தலைநகரை மாற்றுவது என்பது மிகவும் அரிதான ஒன்று அல்ல.  இந்தியாவின் தலைநகராகக் கூட ஒரு காலத்தில் கல்கத்தாவே இருந்தது.  சமீபத்தில் நிகழ்ந்த சில  தலைநகர் மாற்றங்களைப் பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன் எகிப்திய ஜனாதிபதி தங்கள் நாட்டின் தலைநகரம் கெய்ரோவிலிருந்து மாறப்போகிறது என்று கூறினார்.  அந்த நகருக்கு 50 கிலோ மீட்டர் கிழக்காக புதிய தலைநகரம் இருக்கும் என்றும் அறிவித்தார்.  (ஆனால் அரசியல்வாதிகள் பெருமளவில் ஊழல் செய்வதற்காகத்தான் இந்த மாற்றம்  என்று கடும் கண்டனங்கள் எழுந்தன).  கொரோனா காரணமாக இந்த மாற்றம் தள்ளிப் போயிருக்கிறது.  இல்லையென்றால் சென்ற ஆண்டு புதிய தலைநகருக்கு பெயர் வைக்கப்பட்டு அந்த மாற்றமும் நடந்திருக்கும்.

தலைநகரங்களை​ப் பொருத்தவரை சில நாடுகள் வித்தியாசமான நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.    சிங்கப்பூர், மொனாகோ போன்ற நாடுகள் தங்களுக்குத் தனியாக தலைநகர் என்று எதுவும் இல்லை என்று கூறிவிட்டன.  அதாவது அங்கே நாடுகளே தலைநகர்கள்!  சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ.  என்றாலும் அதன் முக்கிய அரசியல் நிகழ்வுகள் எல்லாம் வால்பரைஸோ நகரில்தான் நடைபெறுகின்றன.  ஆஸ்திரேலியாவின் தலைநகர அந்தஸ்து பெற சிட்னியும் மெல்போர்னும் கடுமையாக போரிட்டன.  இரு தரப்பையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கான்பெரா என்ற புதிய நகரம் உருவாக்கப்பட்டு அது தலைநகரானது.

சோவியத் யூனியனிலிருந்து 1991ல் பிரிந்தபோது அல்மாடி என்பதுதான் கஜகஸ்தான் நாட்டின் தலைநகராக இருந்தது.  ஆனால் அந்த நகரை விரிவாக்கம் முடியவில்லை.  சீனாவின் எல்லைக்கு மிக அருகே வேறு அது இருந்தது.  தவிர ஒருமுறை நிலநடுக்கத்துக்கு ஆட்பட்டது.  இதன் காரணமாக தன் தலைநகரை அங்கிருந்து 1200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஸ்தானா என்ற நகருக்கு மாற்றிவிட்டது.  பின்னர் இதன் பெயர் அந்த நாட்டிற்கு நீண்டகாலமாக ஜனாதிபதியாக விளங்கியவரை கௌரவிக்கும் வகையில் நூர் சுல்தான் என்று மாற்றப்பட்டது.

நீண்ட காலமாக பிரேசில் நாட்டின் தலைநகராக ரியோ டி ஜெனிரோ இருந்து வந்தது.  ஆனால் ஒருகட்டத்தில் அங்கு போக்குவரத்து எல்லை கடந்து விட்டது.  இதன் காரணமாக அதன் தலைநகரமாக பிரசிலாவை அறிவித்தது.  பர்மா என்று அறியப்படும் மியான்மர் நாட்டின் தற்போதைய தலைநகர் ரங்கூன் அல்ல.  நேபிடா.  இங்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது என்பதே அந்த நாட்டுக்கு வித்தியாசமான ஒன்றுதான்.   இருபது வழிச் சாலை ஒன்றை புதிய தலைநகரம் கொண்டுள்ளது என்பதை இந்த நாடு பெருமையுடன் அறிவித்திருக்கிறது.  2005-ல் இந்த தலைநகர் மாற்றம் நிகழ்ந்தது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com