

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை நேற்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நெருங்கி வருவதால், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சலுகை அறிவிப்புகள் தாராளமாக இடம்பெறக்கூடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழை நேசிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழை வளர்க்க ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஒட்டுமொத்த பட்ஜெட்டில் ஒரு சிறிய பகுதி என்றாலும் தாய்மொழியை உலகளாவிய அளவில் வளர்ச்சி பெற உதவும் என்பது தமிழர்களின் கருத்து.
ஏற்கனவே (2026) ஜனவரி 11 மற்றும் 12 (ஞாயிறு, திங்கள்) ஆகிய நாட்களில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் தமிழர் தின நிகழ்வில் முதலமைச்சர் உலகளாவிய புலம்பெயர்ந்த மக்களிடையே தமிழ் அடையாளம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் புலம்பெயர்ந்த மக்களிடையே தமிழைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் ரூ.10 கோடி நிதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்நிகழ்வில் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு விரிவான திட்டம் வகுக்கப்படும் என்றும், அவர்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இரண்டு வருட காலத்திற்கு பயிற்சி வகுப்புகளை நடத்த அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்குத் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் நாட்டுப்புறக் கலைகளைக் கற்பிக்க, 100 ஆசிரியர்கள்/கலைஞர்கள் மூலம் ₹10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறப்புத் திட்டம் தொடங்கப்படும் எனத் தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்த நேரடி பயிற்சி வகுப்புகள் அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் நடத்தப்பட்டு, தமிழ் மொழி மற்றும் கலைகள் பாதுகாக்கப்படும் எனப்படுகிறது.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைப் பயிற்றுவித்தல் இந்த திட்டத்தின் நோக்கமாகிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்காக பல்வேறு அரசுகள், அமைப்புகள், மற்றும் சமூக இயக்கங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது சிறப்பு.
குறிப்பாக தமிழ் பள்ளிகள் (Community Tamil Schools) சிங்கப்பூர் மலேசியா அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து , கனடா ,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வார இறுதி தமிழ் பள்ளிகள் (Weekend Tamil Schools).சமூக அமைப்புகள் மூலம் நடத்தப் பட்டு வருகிறது.
தமிழக அரசு ஏற்கனவே தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy), ஆன்லைன் கற்றல் தளங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் செயலிகள் மூலம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேரடிப் பயிற்சித் திட்டம் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். மேலும், உலகப் பொதுமறையான திருக்குறளை உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க அரசு எடுத்துள்ள முடிவும் தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.