

தொடர்ந்து 40 நாட்களாக நீடித்து உலகின் பொருளாதாரத்தில் தடுமாற்றம் மற்றும் மக்களுக்கு அச்சத்தை தந்து வந்த மேற்காசியப்போர் தற்காலிக நிறுத்தம் கண்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
போர் ஒப்பந்தம் குறித்து 48 மணி நேர கடைசி கெடு இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் இரவு அதிபர் டிரம்ப் “இன்று இரவு ஈரானின் முழு நாகரிகமே அழியப்போகிறது. அழியப்போகும் நாகரிகத்தை ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது ” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு எச்சரித்திருந்தார். இந்த கடும் வார்த்தைகள் பெரும் சர்ச்சையை கிளப்பி அதிபர் டிரம்ப்க்கு எதிராக பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் உலக அரசியல் வல்லுநர்களும் தங்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தனர்.
தான் ஈரானுக்கு எதிராக விதித்த முடிவடைந்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக டிரம்ப் இரண்டு வார காலத்துக்கு போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் ஈரானும் இந்த இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானின் விடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் இரண்டு வாரங்களுக்கு ஹேர்மூஸ் நீரிணை திறக்கப்படும் எனவும் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு 'ஈரானுக்கு கிடைத்த வெற்றி' என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாச்சி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப்க்கும் அந்நாட்டின் ராணுவத்தளபதிக்கும் ஈரான் நன்றி தெரிவித்துள்ளது . மேலும் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்து அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரானை இஸ்லாமாபாத்திற்கு அழைத்துள்ளது.
இடைக்கால போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா ,இஸ்ரேல் ஈரான் நாடுகள் சம்மதித்தால் மேற்காசியாவில் பதற்றம் தணிந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு முன் வர வேண்டும் என மேற்காசிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஹேர்மூஸ் நீரினை வழியாக செல்லும் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் , 1979 முதல் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் , வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும், அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா முழு இழப்பீடு வழங்க வேண்டும், லெபனான் காசா ஏமன் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் , வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளவாடங்களையும் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வார கால போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை ஆறு சதவீதம் குறைந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது .மேலும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் எனவும் ஹெஸ்பொல்லாவை அழிப்பதே தங்களது முதன்மையான இலக்கு எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.