அதிக வெப்பத்தால் இத்தாலியில் 10% குறைவான பால் கறவை!

அதிக வெப்பத்தால் இத்தாலியில் 10% குறைவான பால் கறவை!

தெற்கு ஐரோப்பாவை மூன்றாவது வாரமாக வாட்டியெடுத்து வரும் வெப்ப அலைகளால், மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளால் பல ஐரோப்பிய நாடுகள் நிரம்பிவழிகின்றன. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இத்தாலியில் இன்று பிற்பகல் நிலவரப்படி 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவியது.

வெப்பத்தின் பிடியிலிருந்து முதியோர், நலம்பாதிக்கப்பட்டோர், செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பதற்கு, இத்தாலிய நலவாழ்வியல் துறை அமைச்சகம் நாட்டு மக்களுக்கு பத்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும் என்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நேரங்களில் உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவுறுத்தல்களை ஊடகங்களில் உள்நாட்டு பிரபலங்கள் அடிக்கடி தோன்றி வாசித்தபடி இருக்கின்றனர்.

நிலநடுக்கக்கோட்டுப் பகுதி நாடுகளில் மூன்றாவது வாரமாக நிலவும் வெப்ப அலைகள் வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தாலியின் தலைநகர் ரோமில் மக்கள் அதிகமான அளவில் குளுமை சாதனங்களைப் பயன்படுத்துவதால், ஒரே நேரத்தில் மின்சாரத்தின் தேவை பெருகியுள்ளது. இதனால் நகரில் ஆங்காங்கே மின்சாரத் தடையும் ஏற்படுகிறது.

இதனிடையே, இத்தாலியில் செல்லப்பிராணிகளும் பண்ணை விலங்குகளும் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பால் தரும் மாடுகள் வழக்கமான அளவைவிட 10 சதவீதம் குறைவாகவே பால் தருவதாகவும் மாட்டுப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினில் கேனரி தீவில் கடந்த சனிக்கிழமை அன்று பற்றிய காட்டுத் தீ, இன்றுவரை கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டு இருக்கிறது. அந்தப் பகுதியில் காற்றின் வேகம் மட்டுப்பட்டு உள்ளதால், தீயை அணைக்க சாதகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சுமார் 11ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பில் உள்ள மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியில் தீ நிற்கவில்லை. இருபது குடியிருப்புகளும் கட்டடங்களும் தீயினால் நாசமாகிவிட்டன.

தீயினால் 4 ஆயிரம் பேர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இப்போது வீடுதிரும்ப அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com