2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு 10 சதவீத கமிஷனா?

2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு 10 சதவீத கமிஷனா?

2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தபோது, சாமானிய மக்கள் ஏனோ அதிர்ச்சியடையவில்லை. ரோஸ் கலர் 2000 ரூபாய் நோட்டை பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது என்றுதான் கருத்து தெரிவித்தார்கள். நெருக்கடி நிலையை சாதகமாக்கிக்கொண்டு 2000 நோட்டை 500 ரூபாயாக மாற்றித் தர பலர் 10 சதவீத கமிஷன் பெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு யாரும் அவசரப்படவேண்டாம். எந்த வங்கியில் வேண்டுமானாலும் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தாலும் வங்கிகளுக்கு செல்வதற்கு நிறைய பேர் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் வங்கிகளில் சேமிப்புக் கணக்கை கட்டாயம் காட்டவேண்டும். கூடவே பான் அல்லது ஆதார் கார்டுகளையும் காட்ட வேண்டியிருக்கிறது.

2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு எளிதான வழி, பெட்ரோல் நிலையங்களில் மாற்றிக்கொள்வதுதான். ஆரம்பத்தில் மறுத்தாலும், தற்போது பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு டீசல், பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று வற்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.

பத்து சதவீத கமிஷன் வாங்கிக்கொண்டு லட்சக்கணக்கான 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக பெட்ரோல் நிலையங்களில் நிறைய கும்பல்கள் இருக்கின்றன. கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் கமிஷன் ஏஜெண்ட்டுகள் பலர் காவல்துறையின் பிடியில் சிக்கிக்கொள்வதாக செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

திருப்பூரில் 10 சதவீத கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பெருமாநல்லூரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் கொங்குநாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

பொங்குபாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சபரிநாதன் என்பவரை தொடர்பு கொண்ட ஜெயராமன், தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதற்கு பதிலாக 500 ரூபாய் வேண்டுமென்றும் பத்து சதவீத கமிஷன் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பத்து சதவீத கமிஷனுக்கு ஆசைப்பட்டு, 30 லட்சம் ரூபாயை 500 ரூபாய் கட்டகளாக எடுத்து வைத்திருந்த சபரிநாதனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்ற ஜெயராமன், சினிமாவில் வருவது போல் பின்வாசல் வழியாக தப்பித்துவிட்டார்.

2000 ரூபாய் நோட்டுடன் ஜெயராமன் வருவார் என்று காத்திருந்த சபரிநாதனுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. வழக்கு பதிவு செய்த காவல்துறை, சபரிநாதனிடம் உள்ள பணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. முதலுக்கே மோசம் என்பது இதுதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com