பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரப் பதிவு ரத்து!

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரப் பதிவு ரத்து!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி. இவர் தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் சட்டத்துக்குப் புறம்பாக 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பத்திரப் பதிவு செய்திருப்பதால், அந்தச் சொத்துக்களின் பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உதயத்தூரில் உள்ள சொத்து மற்றும் சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 1.3 ஏக்கர் சொத்து ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில தனது பெயருக்கு மாற்றி எழுதி உள்ளார். அதன் பிறகு அந்தப் பத்திரப்பதிவை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜிக்கு மாற்றி எழுதிக் கொடுத்து இருக்கிறார்.

இந்த மோசடி பத்திரப் பதிவு குறித்து அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, இது குறித்து பதிவுத்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மோசடி செய்திருப்பது உறுதியானதால், 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் பத்திரப் பதிவை, பத்திரப்பதிவு துறை மண்டல துணை தலைவர் ரத்து செய்து நடவடிக்கை எடுத்து இருக்கிறார். இந்த மோசடி பத்திரப்பதிவு நடைபெற்றபோது சரவண மாரியப்பன் என்பவர் ராதாபுரத்தில் சார்பதிவாளராக பணியில் இருந்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் 26ம் தேதி வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தனி துணை ஆட்சியர்கள் ஆகியோரின் பணி சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை முறைகேடாக தனது பெயரில் பதிவு செய்த விவகாரம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், “இந்தப் புகார் குறித்தான சொத்து இரண்டு இடங்களில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் பிறகு பதிவுத்துறை மண்டல துணை தலைவர்கள் மூலம் இன்னும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com