100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளதால் 100 நாள் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006 -ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சொந்தமாக தொழில் செய்ய முடியாமல், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடியாமல் சிறப்புத் திறன் இல்லாத மக்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது முழுக்க முழுக்க உடல் உழைப்பு சார்ந்தது. ஒரு ஆண்டுக்கு 100 வேலை நாட்கள் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனால் இத்திட்டம் 100 நாள் வேலைத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்.2ஆம் தேதி முதல் ரூ.294 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், “100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.
பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான சம்பளத்தை மத்திய அரசும் உயர்த்தி இருந்தது. இதற்கான அறிவிப்பு மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போதைய அறிவிப்பின் படி, இந்த ஊழியர்களுக்கான சம்பளம் 7 ரூபாய் முதல் 26 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. புதிய உயர்வின்படி ஹரியானா மாநிலத்தில் அதிகபட்ச சம்பளம் உள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் ரூ.357. அதேபோல, குறைந்தபட்ச சம்பளம் சத்தீஸ்கரில் (ரூ.221) உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் மத்திய அரசும், 25% மாநில அரசும் வழங்குகிறது.