

2006ம் ஆண்டு முதல் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள அடுத்தட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாறிவரும் கிராமப்புற பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு , அந்த பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற காரணங்களை முன்வைத்து இந்த திட்டத்தில் சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நாடாளுமன்றத்தில் புதிய 100 நாள் திட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் உடன் சட்டமாக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் படி கிராமத்தில்100 நாட்களில் இருந்து 125 நாட்களாக இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ,100 நாள் வேலை திட்ட பயனாளிகள் , கூடுதலாக 25 நாள் வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.மேலும் கிராமவாசிகளின் ஆண்டு வருமானம் சற்று அதிகரிக்க கூடும்.
இந்த திட்டத்தினை தமிழகம் உள்பட பாஜக ஆளாத பல்வேறு மாநிலங்கள் அப்போது எதிர்த்து வந்தன. திமுக அரசு இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.பழைய திட்டத்தின் படி 100 நாள் வேலை திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை முழுவதும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் ,125 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பும் தேவைப்படுகிறது என்பதால் , இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த திட்டத்தின் படி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் , பயனாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிதியில் 60% மத்திய அரசும் , 40% மாநில அரசும் பங்களிக்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டில் பின்தங்கியுள்ள, பொருளாதார சுழல் மந்தமாக இருக்கக்கூடிய வடகிழக்கு மாநிலங்களில், மத்திய அரசாங்கம் 90% நீதியை பங்களிக்கும் மீதமுள்ள 10% மட்டும் மாநில அரசு ஏற்றுக் கொண்டால் போதுமானது.
மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சகம் , இந்த திட்டத்திற்காக , சமீபத்தில் மொத்தம் ₹95,692 கோடியை இடைக்கால நிதியாக மாநிலங்களுக்கு வழங்கி உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ₹12,221 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ₹8,508 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும் ₹7,957.57 கோடி நிதி வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ₹12,000 கோடி வரை தமிழகத்திற்கு கிடைத்திருந்த நிலையில், தற்போது 60% நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வேலைவாய்ப்புடன் நின்று விடாமல் , கிராம நிர்வாகங்களுக்கு நிரந்தரமான பொது சொத்துக்களை உருவாக்குவதை குறிக்கோளான கொண்டுள்ளது. குடிநீர் சம்பந்தமான ஏரி, ஆறு , குளங்களைத் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குதல். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கிராம சாலைகளை அமைக்கும் பணிகள் , பஞ்சாயத்து கட்டிடங்கள் , கிராம நிர்வாக கட்டிடங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் போது பணிகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை முந்தைய மாநில அரசான திமுக கடுமையாக எதிர்த்து வந்த நிலையில் , தற்போதைய தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்படும் தாமதம் , கிராமப்புற தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் என்று தமிழக அரசு நினைக்கிறது. ஜூலை 1ம் தேதி முதல் இதற்கான திட்டப்பணிகளை தொடங்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.