சுவிட்சர்லாந்தில் 100 ஹெக்டேர் பரப்பில் காட்டுத் தீ!

சுவிட்சர்லாந்தில் 100 ஹெக்டேர் பரப்பில் காட்டுத் தீ!

ரோப்பாவின் தென்பகுதியைக் கடுமையாக பாதித்துள்ள வெப்ப அலைகள் ஓயாதநிலையில், சுவிட்சர்லாந்து நாட்டிலும் காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது.

இத்தாலியை ஒட்டிய சுவிசின் எல்லையில் தென்பகுதி மாநிலமான வலாய்சில், பிட்ச் மலைப்பகுதி பிரபலமானது. இங்கு நேற்று திங்களன்று உள்ளூர் நேரப்படி காலையில் ஏற்பட்ட தீ, மளமளவெனப் பரவியது.வெப்ப அலைகளின் தாக்கத்தால் இதை முன்கூட்டியே கணித்திருந்த சுவிஸ் அரசு நிர்வாகம், ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. தீ பிழம்புகள் மீது ஹெலிகாப்டர்கள் தண்ணீரைக் கொட்டியபடியே இருந்தன. இரவுவரை இந்தப் பணி நீடித்தது.

ஆனால், அதற்குள் காட்டுத் தீ 100 ஹெக்டேர் பரப்பிலும் பரவி நாசம் செய்திருந்தது. அது உடனடியாக நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை. தீயணைப்புப் படையின் அந்த வட்டார அதிகாரி மரியோ ஸ்காலர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சில நாள்களும் ஆகலாம்; ஒருவேளை சில வாரங்கள்கூட ஆகக்கூடும் என்று கவலையோடு தெரிவித்தார்.

இதுவரை தீயால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை; கட்டங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் அவர் கூறினார். இன்று செவ்வாய்க்கிழமை காலையில் தீப் புகையும் பிழம்பும் பெரும் அளவில் இருந்தபோதும், சற்று தணியத் தொடங்கியுள்ளது என்றும் ஆனால் காற்றின் வேகம் அதிகரித்தால் காட்டுத் தீ மேலும் பரவக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று இரவு தீ சூழ்ந்த பகுதியில் உள்ள கிராமத்தினரை பத்திரமாக அங்கிருந்து அப்புறப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தினோம் என்று வலாய்ஸ் மாநில காவல் துறை அதிகாரி அடிரின் பெல்வால்டு தெரிவித்தார்.
மாநில சுற்றுச்சூழல் அலுவலகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இந்த ஆண்டு கோடையில் அடிக்கடி தீப் பிடிப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன; பருவநிலை தப்புதலால் ஏற்பட்டவெப்ப நிலை அதிகரிப்பும் வறண்ட வானிலையுமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வெப்ப அலைகளால் தீப் பிடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை சுற்றுச்சூழல் அமைப்புகள் கவலையோடு தெரிவிக்கின்றன.

இந்த வெப்ப அலைகளின் வீச்சு இந்த வாரத்தில் இன்னும் அதிகரிக்கக் கூடும் என உலக வானிலை அமைப்பு இன்று முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com