

கடலூர் மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் விவசாயிகள் நலன் கருதி கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு அந்தந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து வந்தனர்.
மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு சேமிப்பு கிடங்குகள் மட்டுமின்றி திருச்சி, காட்பாடி, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில், பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இருப்பினும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கில் சேமித்து வைப்பதற்காக 5 லாரிகளில் மூலம் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அந்த நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக அரசு சேமிப்பு கிடங்கு வளாகத்தில் திறந்த வெளியில் நெல் மூட்டைகளுடன் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் லாரிகளில் இருந்த சுமாா் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்தன. அந்த நெல் முட்டைகள் அனைத்தும் மழையில் நன்றாக ஊறிய நிலையில் தற்போது அந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைத்து வீணாகி விட்டது. விவசாயிகளால் பெரும்பாடுப்பட்டு சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் முளைத்து யாருக்கும் பயனின்றி வீணாகி விட்டன.. இதன் மூலம் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணமாகும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் பருவமழை சமயங்களில் நெல் மூட்டைகள் சேதம் அடையும் அவல நிலையும் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாமல் வெளியே திறந்தவெளிகளில் தேக்கி வைக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
அதேசமயம், அரசு கொள்முதல் நிலையங்களில் போதிய வசதியின்மையே நெல்மணிகள் சேதத்துக்கு காரணம் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று பல வருடங்களாக விவசாயிகளின் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை தீர்வு அதற்கு கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.