முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது  பிறந்தநாள் விழா

எம்ஜிஆர், திரைப்படங்களின் மூலமும், வசீகரமான தோற்றத்தாலும் புகழின் உச்சத்தை அடைந்தவர். சமூக தொண்டனாகவும், ஏழைகளின் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் அவர் ஏற்று நடத்த கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

எம்ஜிஆர் 1972ல் அதிமுக கட்சியைத் தொடங்கினார். 1977 முதல் 1987 டிசம்பர் 24ம் தேதி இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா ஜனவரி 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில்  தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதுக்குறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-ஆவது பிறந்த நாளான 17.1.2023 – செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர்  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

அதேபோல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான 17.1.2023 அன்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும் முக்கிய வீதிகளில் எம்ஜிஆர் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து அவர் நடித்த திரைப்படங்களின் பாடல்களை ஒலிக்க விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில்  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலாஆகியோர் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை கொண்டாடுகின்றனர்.

சசிகலா ஏற்கெனவே தி.நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com