உங்களுடைய விருப்பமின்றி உங்களைச் சார்ந்த தகவல்களைப் பிறருக்கு அளித்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அப்படிதான், தன் கோடிக்கணக்கான பயனர்களின் டேட்டாக்களை அமெரிக்காவுக்கு பகிர்ந்த சம்பவத்தில் மெட்டா நிறுவனம் சிக்கியிருக்கிறது. இதனால் அந்நிறுவனத்திற்கு 10,700 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நம் தனிப்பட்ட தகவல்களை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் என நமக்குள் கேள்வி எழலாம். தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நாம் கணக்குத் தொடங்க நம்முடைய ஈமெயில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் நம்பர், உள்ளிட்ட தகவல்கள் கட்டாயம் அதில் உள்ளீடு செய்ய வேண்டும். இதுவே தான் பேஸ்புக் நிறுவனத்திற்கும் பொருந்தும். நம்முடைய தகவல்கள் வேறு யாருக்கும் தெரியாத வகையில் பார்த்துக் கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பாதுகாப்பு அம்சத்தில் கொடுத்துள்ளது. இதனால் பேஸ்புக் பயனரின் விருப்பமின்றி அவருடைய தனிப்பட்ட தகவல்களை யாரும் அறிய முடியாது.
பல நாடுகளில், பயனர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை பாதுகாப்பது என்பது, சட்ட விதிமுறைக்கு கீழ் வரும் விஷயமாகும். இதேபோலத்தான் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் வேறு எந்த நாட்டுக்கும் பரிமாற்றப்படக்கூடாது என்பதும் சட்டமாகும். இந்த சட்டத்தை பேஸ்புக் நிறுவனம் மீறியதாகவும், குறிப்பாக அயர்லாந்து நாட்டு மக்களின் தகவல்களை அமெரிக்காவிற்கு பகிர்ந்ததாகவும் Meta நிறுவனத்தின் மீது கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வந்தது.
இந்த புகார்களின் அடிப்படையில் அயர்லாந்து டேட்டா ப்ரொடெக்ஷன் கமிஷனானது தனது விசாரணையை நடத்தி வந்தது. அந்த விசாரணையில் மெட்டா நிறுவனம் தன் பயனர்களின் டேட்டாக்களை அமெரிக்காவுக்குப் பகிர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் மிகப்பெரும் நாடுகளுக்கு இடையேயான ரகசியங்கள் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதால், விதிகளை மீறி பயனர்களின் டேட்டாக்களை பகிர்ந்த மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 10,700 கோடியாகும்.
இதுகுறித்து பேசிய பேஸ்புக் நிறுவன தலைவர் 'நிக் கிலெக்' கூறியதாவது, "எங்களைப் போலவே பல நிறுவனங்கள் பயனர்களின் டேட்டாக்களைப் பகிர்ந்து வரும் நிலையில், எங்களுக்கு மட்டும் அபராதம் விதித்து தனிமைப்படுத்துவது ஏமாற்றம் அளிக்கிறது. இது முற்றிலும் நியாயமற்றதாகும். உண்மையிலேயே இந்த செயல், அமெரிக்காவுக்கு டேட்டாக்களை பரிமாற்றம் செய்யும் யோசனையை பிறருக்குத் தூண்டிவிடும்" எனத் தெரிவித்தார்.
என்னதான் அனைவரும் செய்கிறார்கள், நாங்களும் செய்கிறோம் என மெட்டா நிறுவனம் தன் தவறை நியாயப்படுத்த நினைத்தாலும், ஒருவருடைய அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பிறருக்கு தெரியப்படுத்துவது மிகப்பெரிய குற்றமாகும். இதன் அடிப்படையில் மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது சரியானதுதான்.