கேரளாவில் தள்ளாத வயதிலும் தேர்வு எழுதிய 108 வயது தமிழ் மூதாட்டி.

கேரளாவில் தள்ளாத வயதிலும் தேர்வு எழுதிய 108 வயது தமிழ் மூதாட்டி.

கைகளில் செல்போனை வைத்து அதில் தங்கள் நேரத்தை எல்லாம் வீண் செய்து பெற்றோர் படி என்று கண்டிக்கும் போது தற்கொலை கூட செய்யத் துணியும் இளந்தலை முறையினர் இடையே தன்பேரன் தந்த ஊக்கத்தில் கல்வி கற்க வயது தடையே அல்ல என்பதை நிரூபித்து அனைவரின் பாராட்டு மழையிலும் நனைகிறார் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு கேரளாவை வசிப்பிடமாக்கி வாழும் 108 வயது மூதாட்டி. 

       தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் கமலக்கனி. 1915 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது வயது 108.வறுமையில் வாழ்ந்த இவரது குடும்பமும் இவரும்  பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் வண்டன்மேடு கிராமத்துக்குச் சென்றவர்கள் கல்வி பயில ஆர்வம் இருந்தாலும் குடும்ப வறுமையின் காரணமாக, இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கேரளாவின் ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்து பொருள் ஈட்டினார்.

     குடும்பத்துக்காக வேலை செய்தாலும் அவர் மனதில் தான் கல்வி பயில வில்லையே எனும் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. குடும்பக் கடமைகளை எல்லாம் முடித்து படிக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த கமலக்கனிக்கு, கேரள அரசு கொண்டு வந்த  'சம்பூர்ணா சாஸ்த்ரா ' என்ற எழுத்தறிவு வகுப்பு வரப்பிரசாதமாக அமைந்தது. பேரன் தந்த ஊக்கத்தில் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று  அதில் இணைந்து படிக்கத் துவங்கிய இவர் தமிழும்,  மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.

        கல்வி மீது இவர் காட்டிய கடுமையான உழைப்பும் ஆர்வமும் சமீபத்தில் நடந்த எழுத்துத் தேர்வில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்க வைத்தது. பாட்டிக்கு எதுக்கு இந்த வேலை என்று கேட்டவரை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கேரள அரசின் அங்கீகாரமும் பாராட்டுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.

தனது பாட்டியின் பிறந்தநாளை அவரின் மதிப்பை வெளிபடுத்தும் விதம் விமரிசையாக கொண்டாட வேண்டும். வயதான காலத்திலும் எங்களுக்கு முன் மாதிரியாக விளங்குகிறார் எங்கள் பாட்டி என்று இவரின் பேரன் பெருமை கொள்கிறார்.

    இந்தியாவில் அதிக சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக விளங்கும் கேரள அரசு சமீபத்தில்தான் மூத்த குடிமக்களுக்காக இந்த எழுத்தறிவுத் திட்டத்தை துவங்கியதை குறிப்பிட வேண்டும்.

      இளம் வயதில் மனதில் கனன்று கொண்டிருக்கும் இலட்சியத்தை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் விடாமல் பற்றினால் காலம் கடந்தும் அந்த லட்சியம் ஈடேறும் என்பதற்கு நம்ம தமிழ்ப் பாட்டி ஒரு உதாரணம், இனி படிக்க சோம்பல் கொள்ளும் பிள்ளைகளுக்கு இந்தப் பாட்டியை சொல்லி ஊக்குவிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com