12,000 அழகு நிலையங்கள் திடீர் மூடல் - ஆப்கனில் தாலிபான்கள் தடை!

12,000 அழகு நிலையங்கள் திடீர் மூடல் -  ஆப்கனில் தாலிபான்கள் தடை!
Published on

ஆப்கானிஸ்தானத்தை ஆட்சியதிகாரம் செய்துவரும் தாலிபான்கள் விதித்த தடையால், அங்கு ஆயிரக்கணக்கான அழகுநிலையங்கள் நேற்று மூடப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான் இயக்கத்தினர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். ஒட்டுமொத்த நாடும் அவர்களின் வசம் சென்றதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அங்கு இருந்துவந்த பல ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்களின் கல்வி உட்பட பல்வேறு உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கக்கூடாது என தாலிபான்கள் தடை விதித்தனர். பிறகு, பூங்காங்கள், பொது கேளிக்கை மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்களிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன், பொது இடங்களில் பெண்கள் தங்களை முழுவதுமாக மறைத்துக்கொள்வது கட்டாயம் என்றும் உத்தரவிடப்பட்டது.

கடந்த மாதம் வெளியிட்ட ஓர் உத்தரவில், நாடு முழுவதும் பெண்களுக்கான அழகுநிலையங்களை மூடவேண்டும் என தாலிபான் அரசு தெரிவித்தது. ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்தத் தொழில்தான் ஒரே வாழ்வாதாரமாக இருந்துவந்தது. அது மட்டுமின்றி வீட்டைவிட்டு வெளியில் சென்று நான்குபேருடன் பழகுவதற்கு இது பெரும் வாய்ப்பாக இருந்தது.

ஆனாலும் கடந்த மாதக் கடைசியில் நேற்றுவரை அழகுநிலையங்களில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தும்வகையில் கெடு விதித்து, உத்தரவில் சலுகையைப் போல அறிவித்திருந்தார்கள்.

அழகுநிலையங்களைப் பயன்படுத்துவதால் செலவு கூடி, ஏழைக் குடும்பங்களுக்கு கஷ்டத்தை உண்டாக்குகிறது என்றும் அங்கு செய்யப்படும் சில சிகிச்சைகள் இசுலாமியத்துக்கு எதிரானது என்றும் காரணமாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், அதிகப்படியான அலங்காரம் செய்வது இறைவழிபாட்டை முறைப்படி செய்ய விடுவதில்லை என்றும் ஆகவே, புருவத்தைத் திருத்துதல், தலைமுடி சுருளாக்கம் ஆகியவை தடைசெய்யப்பட்டு உள்ளன என்றும் அமைச்சக அறிவிக்கையில் விவரிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் ஹிபத்துல்லா அகுன்சதாவின் வாய்மொழி உத்தரவின்படி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என ஏ.எஃபி.பி. செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்த உத்தரவு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது ஏராளமான அழகுநிலையங்கள் அங்கு உருவாகின. பெண்கள் சுதந்திரமாக வீட்டுக்கு வெளியில் தங்கள் தோழிகளைச் சந்தித்துப் பேசவும், தனிப்பட்ட தொழில் முன்னேற்றங்கள் குறித்த திட்டங்களுக்கான ஆலோசனைக்கும் இவை உதவியாக அமைந்தன. இப்போது தாலிபான் தடையால் 12 ஆயிரம் அழகுநிலையங்கள் மூடப்பட்டன என்றும் 60 ஆயிரம் பெண்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு இருக்கும் என்றும் ஆப்கன் பெண்கள் வர்த்தக, தொழில் சபை கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கனுக்கான ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ரிச்சர்ட் பென்னட், கடந்த மாதம் ஐநா பாதுகாப்பு அவையில் சமர்ப்பித்த அறிக்கையில், உலகத்தில் சிறுமிகள், பெண்களின் நிலை மிக மிக மோசமான நாடுகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார்.  

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் பணியாற்றிவந்த பெண்களையும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கிவிட்டார்கள். பலத்த எதிர்ப்பை அடுத்து அவர்களுக்கு அவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வீட்டில் இருந்தபடி பணியாற்ற ஊதியம் அளிக்கப்படுகிறது.

அழகுநிலையப் பணியாளர்களுக்கு அப்படி இழப்பீடு அளிக்கப்படுமா என்பதும் உறுதி இல்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com