தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த 2021ம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் இருந்தே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. திமுக அரசின் திராவிட மாடல் கொள்கை முதற்கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீகள் ஈர்ப்புக்காக சமீபத்திய வெளிநாட்டு பயணம் வரை அரசின் பல்வேறு நடவடிக்கைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் பலவும் நீண்ட நாட்களுக்குக் கிடப்பில் போடப்பட்டு வருவதாகவும் ஆளுநரின் மீது அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இப்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டு வருவதாக ஆளும் திமுக கட்சியினர் அவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மீன்வள பல்கலைக்கழக மசோதா மற்றும் கால்நடை சட்ட மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த 13 மசோதாக்களில் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் 2020 ஜனவரியில் பதவியில் இருந்தபோது அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக, தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அவரிடம் 13 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகக் ஆர்டிஐயில் தெரிய வந்திருக்கிறது.