
‘இந்தியா முழுவதும் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 13 லட்சம் பெண்கள் காணாமல் போய் இருக்கின்றனர். இதன் பின்புலத்தில் மதவாத மற்றும் பயங்கரவாத சக்திகள் இருக்கலாமோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது. எனவே, இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறி இருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில் நாடு முழுவதும் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை. திட்டமிட்டு நடைபெறுகின்ற சதியாகக் கூட இருக்கலாம். தமிழகத்தில் மட்டும் சுமார் 57 ஆயிரம் பெண்கள் காணவில்லை.
தமிழக காவல்துறை ஆணையர் இதற்காக தொலைந்துபோன குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க ஆபரேஷன் ஒன்றை அறிவித்து, பல குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தி காணாமல் போனவர்கள் பற்றிய முழு தகவலையும் வெளியிட வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், காவல்துறை இணைந்து இந்த ஆபத்தை தடுக்கவும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதன் பின்புலத்தில் மதவாத மற்றும் பயங்கரவாத சக்திகள் இருக்கலாம். கடத்தப்படும் பெண்கள் பயங்கரவாத செயலுக்குப் பயன்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கேரளாவில் சில ஆண்டுகளாக சிறுமிகள் சீரழித்துக் கொல்லப்படும் அவலம் தொடர்கிறது. இதற்குக் கடுமையான நடவடிக்கைதான் தீர்வு என மக்கள் நினைக்கின்றனர். நீதித்துறையும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பெண்கள், சிறுமிகள் மீது வன்முறை நடத்துவோர் மீது சட்டத்தைத் தாண்டி தார்மீக கடமையில் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து மாநில அரசுகளின் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை இதற்காக ஏற்படுத்துவது நல்ல பலனைத் தரும். பெண்கள், சிறுமிகள் தொலைந்து போவது தனிப்பட்ட காரணங்களுக்காக என எடுத்துக்கொள்ளாமல், இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து, இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.