பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு 14 மணி நேர போராட்டம்!

பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு 14 மணி நேர போராட்டம்!

கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன பழங்குடியினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு 14 மணி நேரமாக போராடி வந்தனர். கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

இதே மலையாள இனத்தை சேர்ந்த மக்கள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் வருவாய் துறை மூலம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி)எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மலையாளி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இம்மக்களுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழில் இதர வகுப்பினர் (ஓசி) என வழங்கப்படுகிறது.

இதனால் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தங்களுக்கு இதர வகுப்பினர் என சாதி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதற்காக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் மலையாளி இனத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் அரசு பணி மற்றும் அரசிடமிருந்து கிடைக்கப்படும் உதவிகள் எதுவும் வராததால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கடம்பூர் மலையாளி பழங்குடியின சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

நேற்று காலை கடம்பூர் பஸ் நிலையம் அருகே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் முன்வராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே சக்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோபி ஆர்.டி.ஓ பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதனால் போராட்டம் இரவு வரை தொடர்ந்து நடந்தது. இரவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இரவு போராட்டம் நீடித்தது.

இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கடம்பூருக்கு நேரடியாக வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ஏற்கனவே இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அனுப்பி உள்ளார். நானும் உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். எனவே உங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என்றார்.

இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் 14 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com