எலான் மஸ்க் அவர்களின் பிரபல நிறுவனமான SpaceX நிறுவனத்தில் 14 வயது சிறுவன் பணிபுரிய தேர்வாகி இருப்பது, மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்மில் பலருக்கு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிய வேண்டுமென்ற ஆசை சிறு வயதிலேயே தோன்றியிருக்கும். ஏனென்றால், லட்சங்களில் சம்பளம் வாங்கலாம், வெளிநாட்டுக்கு செல்லலாம் என பல காரணங்கள் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையில் இருக்கிறது. ஆனால் இந்த வேலை அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை நீண்ட காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்பவர்கள் அரிது. இந்த வேலையில் உச்சியை அடைய பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதே உண்மை.
ஆனால், வெறும் 14 வயதுடைய சிறுவன் இந்த கனவு வேலையை அடைந்து, உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ-ல் சேர்ந்து புகழடைந் துள்ளார். அச்சிறுவனின் பெயர் 'கைரான் குவாசி'. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியவைச் சேர்ந்த இந்த சிறுவன், முஸ்தாஹித் மற்றும் ஜூலியா தம்பதியின் 14 வயது மகனாவான். இவருக்கு சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மீது கொண்ட ஆர்வத்தால் பைத்தான் நிழலாக்க மொழியில் கைதேர்ந்தவராக விளங்கியுள்ளார்.
இவரின் இந்தத் திறமை, தனது 13வது வயதிலேயே, சாண்டா கிளாரா யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, நான்கு மாதங்கள் Blackbird.AI என்ற நிறுவனத்தில் மெஷின் லேர்னிங் துறையில் இன்டர்னாக பணியாற்றியுள்ளார். அப்போதுதான் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியருக்கான ஆஃபர் வந்துள்ளது. இதில் அப்ளை செய்து, பல கட்ட நேர்காணலுக்கு பிறகு, இந்த சிறுவன் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இவருக்கு ஸ்பேஸ் X நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்திலிருந்து சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சிறுவன், தன் மகிழ்ச்சியை அனைவருடமும் வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் எழுதியிருந்த பதிவில் "அடுத்த ஸ்டாப் ஸ்பேஸ் எக்ஸ். உலகின் தலைசிறந்த நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக சேர்ந்துள்ளேன். சமூக வலைதளங்களில் என்னை பின்தொடர்பவர்களுக்கு நன்றி" என பதிவிட்டிருந்தார்.
தொடக்கத்திலேயே இவருடைய மாத சம்பளம் பல லட்சங்களில் இருக்கும் என்றும், ஆண்டு சம்பளமாக இவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இளம் வயதிலேயே இத்தகைய சாதனை புரிந்த சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.