மகாராஷ்டிரா அரசின் "லட்கி பஹின் யோஜனா" (Ladki Bahin Yojana) எனப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், சுமார் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, ரூ.21.44 கோடி ரூபாய் வரை நிதி பலன்களைப் பெற்றிருப்பது தணிக்கையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மகாராஷ்டிரா அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், இந்த மோசடியை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஏழைப் பெண்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் ஆண்கள் பதிவு செய்து பலனடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மோசடியில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பணத்தை மீண்டும் வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட "லட்கி பஹின் யோஜனா" திட்டம், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்குகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசரகதியில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதால், பயனாளிகள் தேர்வுப் பணியில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த மோசடி, திட்டத்தின் முதல் ஆண்டிலேயே ரூ.1,640 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 14,298 ஆண்கள் தவிர, 7.97 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மூன்றாவது உறுப்பினர்களாகப் பதிவு செய்து (ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்களுக்கு மட்டுமே பலன் என்பது விதி) ரூ.1,196 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட 2.87 லட்சம் பெண்களும் திட்டப் பலனைப் பெற்று, ரூ.431.7 கோடி இழப்பிற்கு காரணமாகியுள்ளனர். நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்களும் தவறாகப் பலனடைந்துள்ளனர்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நடத்திய தணிக்கையில் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் 2025 முதல், சுமார் 26.34 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு திட்டப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 2.25 கோடி தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்துள்ளார். திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மையும், முறையான சரிபார்ப்பும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.