கம்பம் தேனி பகுதிகளில் சுற்றி தெரியும் அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என அழைக்கப்படும் காட்டுயானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக போக்கு காட்டிவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்கவும் முடியாமல், வன பகுதியில் விரட்டவும் முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த மே 27-ம் தேதி காலை திடீரென புகுந்த யானை, வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் உலா வந்தது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரிக்கொம்பன் யானை கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை, மணலாறு, இரவங்களாறு உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தேக்கடி வனப்பகுதிக்கு அருகாமையில் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்தபோது வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் போட்டும் வனப்பகுதிக்குள் அரிக்கொம்பனை விரட்டினர். அண்மையில் கிடைத்த ரேடியோ காலர் சிக்னல் படி தேனி மாவட்டம்
லோயர் கேம்ப் பவர் ஹவுஸ் அருகில் உள்ள வனப்பகுதியில் அரிக்கொம்பன் இருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை அரிக்கொம்பன் யானை கடந்து சென்றுள்ளதாகவும் சிக்னல் பதிவாகியுள்ளது. இதனையடுத்து யானை தேக்கங்காடு வனப்பகுதியில் இருந்து கம்பம் மெட்டு நோக்கி நகர்ந்து செல்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கம்பம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகள், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆகிய பேரூராட்சிகள், கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடரும். என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், அரிக் கொம்பன் ஊருக்குள் வருவதை தடுக்க ஐந்து மயக்க ஊசி செலுத்தும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளது. அரிக் கொம்பன் நடமாட்டம் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.