

ஜி.எஸ்.டி. தொடர்பான சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து உளவுத்துறைக்கு தகவல்களின் கிடைத்தன.அதனடிப்படையில் பெங்களூரு, சென்னை, வேலூர், பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. கர்நாடகா வணிக வரித்துறை இந்தச் சோதனையை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கையின் போது, தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களான இர்பாஸ் அகமது மற்றும் நபீஸ் அகமது ஆகியோர் பேரணாம்பட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 'டிரையன் டிரேடர்ஸ்', 'வொண்டர் டிரேடர்ஸ்', 'ராயல் டிரேடர்ஸ்' மற்றும் 'கேலக்ஸி என்டர்பிரைசஸ்' போன்ற பல போலி நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல்,பெங்களூருவில், 'பவர் ஸ்டீல் அண்ட் சிமெண்ட்', 'பி.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன்', 'எஸ்.வி. டிரேடர்ஸ்' மற்றும் 'எஸ்.ஆர்.எஸ். சிமெண்ட் ஸ்டீல் டிரேடர்ஸ்' போன்ற போலி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்ததாகக் கூறப்படும் எட்டாலா பிரதாப் மற்றும் ரேவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்..கைது செய்யப்பட்ட அனைவரும் பெங்களூருவில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இச்சோதனையின் போது 24 கைப்பேசிகள், 51 சிம் கார்டுகள், இரண்டு பென் டிரைவ்கள், பல வங்கி கணக்கு அறிக்கைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் ரப்பர் ஸ்டாம்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடக வணிக வரித்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள இத்தகவலின்படி, ரூ. 1,464 கோடி மதிப்பிலான மாநிலங்களுக்கு இடையேயான போலி ரசீது மோசடி நடந்துள்ளது. பெங்களூரு, சென்னை, வேலூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டதாக கர்நாடகா வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.
சிமெண்ட், இரும்பு, உருக்கு மற்றும் இதர கட்டிடப் பொருட்களைப் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்குதல் மற்றும் விற்பனை செய்தது போல மோசடிப் பரிவர்த்தனைகளை இந்தக் கும்பல் உருவாக்கியுள்ளது. உண்மையில் சரக்குகள் எதையும் நகர்த்தாமலேயே, உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit - ITC) பலன்களைத் தவறாகப் பெற்று இந்த மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.