மாதம் ஆயிரம் ரூபாய் பெற தற்போது வரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்!

மாதம் ஆயிரம் ரூபாய் பெற தற்போது வரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கும் கலைஞர் உரிமைத் தொகையை பெற தற்போது வரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக தனது தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் இந்தத் திட்டம் செப்டம்பர் 17ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கான முதல்கட்ட முகாம் முழுமையாக முடிவடைந்து, இரண்டாவது முகாம் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது முகாமிலும் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்காக ஆகஸ்ட் 19 மற்றும் 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தவறவிட்டவர்கள் இந்த முகாமில் விண்ணப்பங்களைப் பெற்று பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு, சுயமரியாதையோடு வாழ முடியும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்கட்ட முகாமை 24.7.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம், தோப்பூரில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 20,765 நியாய விலைக் கடைகள் மூலம் நடைபெற்ற முதல்கட்ட முகாமில் 88.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிறகு தற்போது நடைபெற்று வரும் 2ம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது வரை 1.48 கோடி பேர் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், விண்ணப்பித்தவர்களின் தகுதியை ஆய்வு செய்ய வரும் குழுவினருக்கு விண்ணப்பதாரர்கள் போதிய ஒத்துழைப்பு அளித்து, உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com