14800 கோடி மதிப்பிலான iPhone வியாபாரத்தை தன்வசமாக்கிய Tata குழுமம்.

14800 கோடி மதிப்பிலான iPhone  வியாபாரத்தை தன்வசமாக்கிய Tata குழுமம்.
Published on

ந்தியாவிலேயே மிகவும் பழமையான டாட்டா குழுமம் துவங்கப்பட்டு 150 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்றும் பல தொழில்களில் அவர்கள் சிறந்து விளங்கி வரும் நிலையில், இப்போது அடுத்த சாதனைக்கும் ரெடியாகிவிட்டார்கள். 

உப்பில் தொடங்கி பல தொழில்நுட்ப சேவைகள் வரை அனைத்திலுமே டாட்டா குழுமம் பங்களிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இ-காமர்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சேவைகளில் தனது கால் தடத்தைப் பதிக்க முயற்சித்து வரும் வேளையில், தற்போது உலகையே வியக்க வைக்கும் ஒரு புதிய சாதனையும் படைக்கவுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து ஐபோனின் முக்கிய பாகமான Chassis-ஐ தயாரித்து வருகிறது. ஐபோனின் முதுகெலும்பாக இந்த சேசிஸ் செயல்படுகிறது. மேலும் சிப் தயாரிப்புத் துறையில் அவர்கள் வளர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆப்பிள் சப்ளையர் தொழிற் சாலையை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை டாடா குழுமம் கைப்பற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால், ஐபோன் அசெம்பிளி அமைப்புக்குள் நுழையும் முதல் உள்ளூர் நிறுவனம் என்கிற பெருமை டாட்டா குழுமத்திற்கு வந்துள்ளது. தற்போது கர்நாடகாவில் உள்ள Wistron தொழிற்சாலையை வாங்குவதற்கான முயற்சியில் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் மதிப்பு சுமார் 600 மில்லியன் டாலர்களாகும். Wistron நிறுவனத்தில் சுமார் 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்குதான் ஆப்பிள் ஐபோன் 14 மாடல் அசெம்பிளி செய்யப்படுகிறது. 

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விற்பனை செய்வதற்கு சுமார் 14,800 கோடி மதிப்பிலான ஐபோன்களை தொழிற்சாலையிலிருந்து Wistron நிறுவனம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொழிற்சாலையில் பணியாளர்களை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் வணிகத்திலிருந்து வெளியேறினால், டாட்டா குழுமம் அதை ஏற்று நடத்த தயாராக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுவரை தனது உதிரி பாகங்களை சீனாவில் மட்டுமே தயாரித்து வந்த ஆப்பிள் நிறுவனம், தற்போது அதை பல நாடுகளில் விரிவுபடுத்தத் துவங்கியுள்ளது. இதில் இந்தியாதான் அவர்களுடைய முதல் தேர்வாக இருக்கிறது. 

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்நிலையில், ஐபோனின் முக்கியத் தயாரிப்பாளராக டாட்டா குழுமம் களத்தில் இறங்கப்போகிறது என்ற செய்தி, வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தியாவின் வளர்ச்சிக்கும் இது பலவிதத்தில் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com