உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்த 15 ஆசிரியர்கள்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்த 15 ஆசிரியர்கள்!
Published on

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு பணி நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பாக 1800 பேர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை சுமார் 15 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தத தகவல். போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் உடல் ஆரோக்யம் கெட்டு இவ்விதமாக மயங்கி விழுந்ததால் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களில் ஒருவர் போராட்டம் குறித்து ஊடகங்களிடம் பேசும்போது,

“நான் 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 100 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாகி இருந்தேன். என்னுடன் தேர்வு எழுதியவர்களில் 83 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்து விட்டது. ஆனால், 85 மதிப்பெண்கள் பெற்றவர்கள் இங்கு என்னோடு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 100 மதிப்பெண் பெற்ற நான் இங்கு நின்று உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இதற்கு காரணம் அரசு போடக்கூடிய புதுப்புது GO க்கள் தான். அவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் இப்போது பணி நியமனம் பெற வேண்டும் என்றால் நாங்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள். அதில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்கிறார்கள். முதல்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற போது எனக்கு வயது 42 இப்போது எனக்கு வயது 52 ஆகி விட்டது . இதில் புதிதாகப் போடப்பட்ட GO ஒன்றில் வயது 40 ஐக் கடந்த ஃபார்வேர்டு கம்யூனிட்டியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடையாது. பிற கம்யூனிட்டியைச் சேர்ட்ந்தவர்களுக்கு வேலையில் சேரும் வயது வரம்பு 45 என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு GO க்களாலுமே நாங்கள் பாதிப்படைவோம். தேர்வு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையில் அரசு எங்களுக்கு பணி நியமனம் வழங்கி இருக்கலாம். அவர்களது தாமதத்தால் நாங்கள் இன்று தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த இரண்டு GO க்களையும் ரத்து செய்து 2013 ஆம் ஆண்டில் தேர்வான எங்கள் அனைவருக்கும் அரசுப் பணி நியமனம் வழங்க வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் இங்கு போராடிக்

கொண்டு இருக்கிறோம். அரசு பணி நியமனம் வழங்காமல் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகரவே மாட்டோம். இதனால் நாங்கள் செத்தாலும் கூட இங்கு தான் சாவோமே தவிர வேலை நியமனம் கிடைக்காமல் இங்கிருந்து நகர மாட்டோம்”

- என்று வேதனையுடன் தங்களது நிலையைப் பகிர்ந்து கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com