சேலம் முழுவதும் ஆடிப் பண்டிகை கொண்டாட்டங்கள்... எங்கும் மக்களின் உற்சாகம்... மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரங்கள்... பிரசாதங்கள்... கோலாகலமான இந்தத் திருவிழாவில் மக்கள் அனைவரும் மகிழ்ந்திருக்க, சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஆர்வலர்கள் மட்டும் கோயில் வாசலில் இறைந்துகிடக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பார்த்து கவலையுடன் கடக்கின்றனர். ஒரு சிலர் பிளாஸ்டிக் கேரி பைகளில் பொருள்களைத் தரும் கடைக்காரரிடம் சென்று பிளாஸ்ட்டிக் வேண்டாமே என்று சொல்ல, கடைக்காரர் அவர்களுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்து வேலைகளில் கவனம் செலுத்த, சொன்னவர்களோ விலகிப் போயினர்.
சேலத்தில் அதிகரித்து வரும் கேரி பேக் பயன்பாடு குறித்தான கவலையை தெரிவித்து வருகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். இதன் காரணமாக, பிற்காலத்தில் சுற்றுசூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என எச்சரிக்கும் இவர்கள் மேலும் சொன்னது:
“பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக மாநில ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம் . இந்த நிலையில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால் விழிப்புணர்வும் பரவலாக இருந்தது... பிளாஸ்டிக் கேரிபேக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு பிறகு பெரும்பாலான மளிகை கடைகள், ஜவுளிக்கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துவது பெருமளவில் குறைந்தது. இறைச்சிக் கடைகளில் இறைச்சி எடுக்க வரும்போது பாத்திரம் கொண்டு வர வேண்டும் என்று எழுதி வைத்தனர். ஹோட்டல்களிலும் சாம்பார் சட்னி வாங்க பாத்திரங்கள் எடுத்து வரவேண்டும் என்று எழுதப்பட்டது. பல உணவகங்களில் பிளாஸ்டிக்குப் பதில் வாழையிலையில் உணவைக் கட்டிக் கொடுத்ததை பலரும் பாராட்டினர். அதேபோல ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. ஆனால் இந்த நடைமுறை ஒரு சில மாதங்கள் மட்டுமே பின்பற்றப்பட்டது. மீண்டும் பிளாஸ்டிக் கடைகளில் இடம்பெற்று பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது..
இப்போது இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் மட்டும் சுமார் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகிறது. அவற்றில் 6000 டன்களுக்கு மேல் குப்பைகள் கிடங்குகளில் முறையாக பிராசஸ் செய்யப்படாமல் தேங்கிக் கிடப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் எளிதில் மட்காது என்பதால் இது சுற்று சூழலுக்கு பெரும் கேடாக விளங்குகிறது... காடுகளில் வாழும் விலங்குகள் தொடங்கி கடல் உயிரினங்கள் வரை பிளாஸ்டிக்கை விழுங்குவதால் ஏற்படும் ஜீரணக் கோளாறு காரணமாக பெருமளவு உயிரிழக்கும் நிலை கவலை அளிக்கிறது. நாளொன்றுக்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவை கணக்கிட்டால் எதிர்காலத்தில் இந்தியா பெரும் சுகாதாரக் கேடை சந்திக்க வேண்டி இருக்கும்.
தற்போது சேலம் சரகத்தில் ஆடி திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை பயன்படுத்திவிட்டு மக்கள் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். எளிதில் மக்காத இது போன்ற பிளாஸ்டிக் கேரி பைகள் மண்ணின் வளத்தை சிதைத்து விடும். எனவே திருவிழா காலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது மிகவும் அவசியம்.“