1.7 லட்சம் மாயம். போலீஸிடமே கைவரிசை காட்டிய மோசடி கும்பல்.

1.7 லட்சம் மாயம். போலீஸிடமே கைவரிசை காட்டிய மோசடி கும்பல்.

புதுச்சேரியை அடுத்த துத்திப்பட்டு கடப்பேரி குப்பத்தில் வசித்து வருபவர் 39 வயதான கிருஷ்ண சர்மா. காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இணைய செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த பொருள் அவருக்குக் கிடைக்கவில்லை. அது குறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை மையத்தை இணையத்தில் தேடியுள்ளார். அப்போது ஒரு கைபேசி எண் கிடைத்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் கிருஷ்ண சர்மாவுக்கு வாடிக்கையாளர் சேவை லிங்கை அனுப்பி, அதில் பணம் செலுத்திய விவரம், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். 

அதன்படி கிருஷ்ண சர்மாவும் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்த நிலையில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ண ஷர்மா புகார் அளித்தார். அதன்படி நடந்த விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது அசாமுதீன் அன்சாரி, 28 வயது, மகேஷ்குமார் ஆகியோரது வங்கிக் கணக்கில் கிருஷ்ணாவின் பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி மற்றும் மகேஷ்குமார் இருவரும் சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது. 

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சென்னை ஒரகடம் பகுதிக்குச் சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 ஏடிஎம் கார்டுகள், இரண்டு கைப்பேசி ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர்கள் தங்களது வங்கிக் கணக்கை ஜார்க்கண்டில் உள்ள ஒருவரிடம் அளித்திருப்பதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், பணம் தங்களது வங்கி கணக்குக்கு எப்படி பரிமாறப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மோசடி பணம் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளர்கள் கைது செய்ய ப்பட்ட நிலையில், பணத்தை அபகரித்த ஜார்க்கண்டை சேர்ந்த மோசடி மன்னனை புதுச்சேரி போலீசார் தேடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com