1700-களில் களவாடிய புராதனப் பொருட்களைத் திருப்பித்தரும் டச்சு நாடு!

1700-களில்  களவாடிய புராதனப் பொருட்களைத் திருப்பித்தரும் டச்சு நாடு!
Image source: Rijksmuseum via AP

தன் காலனி நாடுகளிலிருந்து 1700களில் எடுத்துச்சென்ற புராதனப் பொருட்களை அந்தந்த நாடுகளுக்கே திரும்பத்தருகிறது, நெதர்லாந்து.

டச்சு என அழைக்கப்பட்ட இன்றைய நெதர்லாந்து பிரிட்டனுக்கு முன்னரே, உலக நாடுகள் பலவற்றையும் தன் காலனி நாடுகளாக ஆக்கிக்கொண்டது. அந்தக் காலகட்டத்தில் காலனி நாடுகளில் மன்னர்களிடம் இருந்த புராதன, பழம்பெருமை கொண்ட பொருட்களையும் டச்சுக்காரர்கள் கொள்ளையடித்தும் பறித்தும் சென்றனர். அப்படி பறித்தும் களவாடப்பட்டும் எடுத்துச்செல்லப்பட்ட பொருட்களை நெதர்லாந்தில் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.

இது மட்டுமின்றி டச்சுக்காரர்களிடமிருந்து பிரிட்டனும் ஜெர்மனியும் அந்தப் பொருட்களைக் கைப்பற்றியதும் நடந்தது. அந்தப் பொருட்களை பிரிட்டன் அரசாங்கம் அண்மையில் திருப்பித் தந்தது. குறிப்பாக, 1897ஆம் ஆண்டில் நைஜீரியாவில் இருந்து களவாடப்பட்ட வெண்கலங்களை பிரிட்டன் அருங்காட்சியகம் திருப்பித் தருவதாக அறிவித்தது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பழம் பொருட்களை, இலங்கையிடம் தரும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதில், 1740ஆம் ஆண்டில் இலங்கையின் கண்டி மன்னருக்கு உள்நாட்டு செல்வந்தர் ஒருவர் அளித்த வெண்கல பீரங்கி முக்கியமானதாகும். 1765ஆம் ஆண்டில் கண்டி மீது தாக்குதல் நடத்தி, கைப்பற்றிய டச்சுப் படை, இந்த வெண்கல பீரங்கியையும் கைப்பற்றிக்கொண்டது என்று கூறப்படுகிறது.

Image source: Rijksmuseum via AP

இத்துடன், தங்கத்தால் ஆன உறையுடன் கூடிய உடை வாள், வெள்ளி உடை வாள், தங்கக் கத்தி, இரண்டு பெரிய துப்பாக்கிகள் என மொத்தம் ஆறு பழம் பொருட்கள் இலங்கைக்குத் திருப்பி அளிக்கப்படுகின்றன. பெரிய துப்பாக்கிகள் ஒவ்வொன்றும் இருபத்தெட்டு கி.கி. எடை கொண்டவை என்றும் 18ஆம் நூற்றாண்டு கால இலங்கையின் துப்பாக்கித் தொழில்நுட்பத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது என்றும் இலங்கை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கொழும்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையினது மட்டும் இல்லாமல், இந்தோனேசியா அரச மாளிகையிலிருந்து 1894ஆம் ஆண்டில் டச்சுப் படை லோம்பேக் புதையல் எனப்படும் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்தது. அதில் விலை உயர்ந்த அணிகலன்கள், கற்கள், தங்க, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றையும் திருப்பியளிக்க நெதர்லாந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நெதர்லாந்தில் பழைய டச்சு காலனி ஆதிக்கம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமையன்று நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் செய்த காரியம் ஒன்றும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

பதினேழாம் நூற்றாண்டில் பெரும் காலனியாதிக்க அரசாக உருவெடுத்த டச்சு, பல கண்டங்களிலும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 6 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை அடிமைகளாகக் கடத்திச் சென்றது. அப்படிக் கடத்தப்பட்டவர்களை வைத்து அடிமை வர்த்தகம் செய்ததும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அதையொட்டியே நெதர்லாந்து மன்னர் கடந்த ஒன்றாம் தேதி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com