துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்! உலக வங்கி அறிவிப்பு!

Earth Quake
Earth Quake

துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காகத் துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது.

திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில் துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிகல் சர்வே தெரிவித்தது. துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக அதில் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர். துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவானது.

இதுவரை துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கத்தின் காரணமாக, 78,124-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் தடையாக உள்ளது. அதே போன்று, நிலநடுக்கத்திற்கு முன்பிருந்தே, உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் சிரியா அகதிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரியா அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் இந்த அகதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ $1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவும் மருந்துகள் , மருத்துவர்கள் மற்றும் மீட்பு படையினரை அனுப்பி உதவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com