19 வயதில் வில்வித்தையில் சாதனைப்படைத்த இளைஞர்: பிரபலப்படுத்திய ஆனந்த் மஹிந்திரா!

19 வயதில் வில்வித்தையில் சாதனைப்படைத்த இளைஞர்: பிரபலப்படுத்திய ஆனந்த் மஹிந்திரா!
Published on

தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது நல்ல செய்திகளை தந்து பார்வையாளர்களை பரவசப்படுத்த தவறுவதே இல்லை. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான அவரை சுமார் 1 கோடி பேர் டுவிட்டரில் பின்தொடர்கின்றனர்.

சுவையான, வேடிக்கையான, அறிவுபூர்வமான செய்திகளையும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட துறையில் யாராவது எந்த சாதனையாவது புரிந்திருந்தால் அதை பகிர்ந்து கொள்ளவும் அவர் தவறுவதில்லை.

சமீபத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் 19 வயது பிரதமேஷ் சமாதான் ஜாகர் என்பவர் தங்கப் பதக்கம் வென்ற செய்தியை விடியோவாக அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த விடியோவை ஒரிஜனலாக பயிற்சியாளர் சுதிர் புத்ரன் என்பவர் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பிரதமேஷ் சமாதான் ஜாகர், வில்வித்தை போட்டியில் உலகின் நெ.1 இடத்தை பிடித்திருந்த நெதர்லாந்தின் மைக் கிளோஸரை வென்று உலக கோப்பைக்கான தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். அவர் மைக் கிளோஸரை 149-148 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

இந்த விடியோவை மறுபதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா, படத்தின் கீழ் “நம்பமுடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். வெச்சகுறி தப்பாமல் வெற்றியை கைப்பிடித்திருக்கிறார் பிரதமேஷ். அவருக்கு சரியான பயிற்சி அளித்துள்ளார் சுதிர் புத்ரன். அந்த 19 வயது இளைஞரின் திறமை இன்றுவரை எனக்கு தெரியாமல் போய்விட்டது. இனி அவரது செய்கைகளை நான் பின் தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரிஜினல் விடியோவில், இந்திய பூமி ராமர், அர்ஜுனன் உள்ளிட்டோர் வில் மற்றும் அம்புடன் சுற்றித்திரிந்த பூமியாகும் . ஆனால், வில் வித்தையை ஏனோ நாம் புறக்கணித்துவிட்டோம். 19 வயதில் சாதனை படைத்த பிரதமேஷ் இந்தியர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்போதைய சூழலில் இவர்தான் உலக சாம்பியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடியோவை பலரும் வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளனர். இனி வரும் போட்டிகளிலும் அவர் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆனந்த் சார்… நீங்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் அந்த இளைஞரின் திறமையை வெளிப்படுத்த உதவிய சுதிருக்கும் எனது பாராட்டுகள் என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த இளைஞரின் சாதனை என்னை வியக்கவைத்துவிட்டது. அர்ப்பணிப்பு உணர்வும், மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். பிரதமேஷுக்கு எனது பாராட்டுகள் என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் சாதனையைக் கண்டு பெருமைப்படுகிறோம் பிரதமேஷ். இந்தியாவே உங்களுக்கு தலைவணங்குகிறது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று மூன்றாமவர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com