ஜெர்மனியில் வீணாகும் 20 கோடி கொரோனா தடுப்பூசிகள்!

ஜெர்மனியில் வீணாகும் 20 கோடி கொரோனா தடுப்பூசிகள்!
Published on

ஜெர்மனியில் 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது வரப்பிரசாதமாக இருந்த தடுப்பூசி மருந்து, ஜெர்மனியில் 20 கோடி அளவுக்கு வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் முதல் அலை முடியும்வரை தடுப்பூசி ஒரு வரமாக இருந்தநிலையில், கொரோனாவின் மூன்றாவது அலைக்குப் பிறகு தடுப்பூசிகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. இரண்டாம் அலையின் தாக்கத்தின்போதே பொது சுகாதாரம் சிறந்து விளங்கும் எனக் கூறப்படும் ஐரோப்பிய நாடுகளில், ஏராளமானவர்கள் கொத்துக் கொத்தாக மரணம் அடைந்தனர். குறிப்பாக, முன்னேறிய நாடுகளின் வாழ்நிலை உயர்வால் அதிக அளவில் வசித்துவந்த முதியவர்களால் கொரோனாவுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை.

மருத்துவமனைகளில் அனுமதிக்கும் அளவுக்கு பெரும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதைவிடக் கொடுமையாக, மரணித்தவர்களை புதைப்பதற்கும் இடம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான வண்டிகள் மயானப் பூங்காங்களின் வெளியே நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த கொடுமையும் அரங்கேறியது. ஒருவழியாக, அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து நிம்மதி அளித்தன.

அதன்பிறகு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகள் என கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை அரசுகள் மேற்கொண்டன.ஜெர்மனியில் இதற்காக ஏராளமான அளவில் தடுப்பூசிகள் வாங்கி வைக்கப்பட்டன. அவற்றுக்கான தேவை இல்லாமல் காலாவதி ஆகிவிட்டதால், 8.3 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் தூக்கி எறியப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 160 கோடி யூராக்கள் எனக் கூறப்படுகிறது.

இதில், கடந்த ஆண்டு டிசம்பருக்குள் 5.4 கோடி டோஸ் தடுப்பூசிகளையும் நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் 2.9 கோடி டோஸ் தடுப்பூசிகளையும் ஜெர்மனி அரசு பயன்படுத்தாமல் தூக்கியெறிந்துள்ளது. இத்துடன், இன்னும் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்துவதற்கென குளிர்பதன வசதியில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

ஜூன் 5ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மொத்தமே அந்நாட்டில் 268 டோஸ் தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டுள்ளன என ஐரோப்பிய நோய்த் தடுப்பு முகமையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முந்தைய மூன்று வாரங்களில் 1, 462 பேர்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், கையிருப்பில் உள்ள 12 கோடி டோஸ் தடுப்பூசிகளும் வீணாகிப் போய்விடும் என்று சுகாதார வல்லுநர்கள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படாத கொரோனா தடுப்பூசிகளால், நூற்றுக்கணக்கான கோடி யூரோக்கள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com