தமிழகத்தில் 20 ஆயிரம் செல்போன் இணைப்புகள் தடை - சைபர் கிரைம் போலீஸாரின் அதிரடி!

தமிழகத்தில் 20 ஆயிரம் செல்போன் இணைப்புகள் தடை - சைபர் கிரைம் போலீஸாரின் அதிரடி!
Published on

கடந்த இரண்டு வாரங்களில் முறைகேடான விஷயங்களில் பயன்படுத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 19,654 செல்போன் எண்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளம் உதவி செய்திருக்கிறது.

இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலும் தொலைபேசி வாட்ஸ் அப் அழைப்புகளின் வழியாக தவறான செயல்பாடுகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. பொருளாதார இழப்பு மட்டுமல்ல ஆபாசப் பேச்சு, வன்முறைச்செயலுக்கும் இவை காரணமாக இருந்துவிடுகின்றன.

பெரும்பாலான இணையக்குற்றங்களுக்கு பிஷிங், ஸ்மிஷ்ங் உள்ளிட்டவைதான் காரணமாக இருக்கின்றன. நம்முடைய கே.ஒய்.சி விபரங்களை அப்டேட் செய்யவேண்டும் என்று வரும் வாட்ஸ்அப் செய்திகளில் ஏமாந்துவிடுபவர்கள் நிறைய பேர். எஸ்.எம்.எஸ், ஆதார் எண், பான் அப்டேட் செய்ய வேண்டும் என்று கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகள் அதிகம். இதை உண்மையென்று நம்பி ஏகப்பட்ட பணத்தை இழந்தவர்கள் அதிகம்.

தொலைபேசி எண்ணை தவறாக பயன்படுத்தி மோசடி செய்வது, மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட இணைய வழி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார்களும் குவிய ஆரம்பித்திருக்கின்றன. முதல் கட்டமாக இத்தகைய மொபைல் எண்களை தடை செய்யும் பணியை சைபர் கிரைம் செய்து வருகிறது.

சட்டத்திற்கு புறம்பாண எந்தவொரு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் மொபைல் எண்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்கிறார், தமிழக காவல்துறையின் சைபைர் கிரைம் குழுவின் கூடுதல் இயக்குநர் ஜெனரலான சஞ்சய் குமார். இத்தகைய எண்களை முடக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள இந்தியன் சைபர் கிரைம் I4C இணையத்தளம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண் குறித்து புகார் அனுப்ப முடியும். சம்பந்தப்பட்ட புகாரை பரிசீலனை செய்யும் டிராய் நிறுவனம், தொலைபேசி எண்ணை நிரந்தரமாக தடை செய்யும் பணிகளில் ஈடுபடும். எந்த மாநிலமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சைபர் கிரைம் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார்களை பதிவு செய்ய முடியும்.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை என்சிஆர்பி இணையத்தளத்தில் அதிகளவு புகார்களை பதிவு செய்திருக்கிறார்கள். மாநில அளவில் உள்ள சைபர் கிரைம் பிரிவின் காவல்துறை சூப்பரெண்ட் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை தடை செய்யுமாறு புகார் அனுப்பினால் போதுமானது. நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் (NCRP) இணையத்தளத்தில் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.

என்.சி.ஆர்.பி இணையத்தளம் மூலமாக பெறப்படும் புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொலைபேசி எண்ணை முடக்கிவிட்டால் மீண்டும் பெற முடியாது. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வேறு புதிய இணைப்பு தரவும் வாய்ப்பில்லை. தொடர்ந்து யாராவது உங்களுக்கு போன் மூலமாக தொல்லை கொடுத்தால் சைபர் கிரைம் பிரிவை அணுகுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com