
ஒரு துப்புரவுத் தொழிலாளி ஆய்வுக் கூடத்தின் ஃபிரீசரை அணைத்ததால், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகள் முற்றிலுமாக அழிந்துபோன நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பணியாளர் மீது முறையான பயிற்சியின்மைக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஒரு இன்ஸ்டிடியூட் ஒன்றில் இந்தியாவின் K.V. லட்சுமி தலைமையில் ஒளிச்சேர்க்கை தொடர்பான ஆய்வு பல ஆண்டுகளாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு மட்டும் வெற்றிகரமாக முடிந்தால், சோலார் பேனல் உருவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். இது மிகப்பெரிய மாற்றத்திற்கான அடித்தளமாக அமைந்திருக்கும் என்கின்றனர்.
ஃப்ரீசர் முழுமையாக ஆப் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஆய்வுக்கூடத்தில் வெப்பநிலை 3 டிகிரி அதிகமாகிவிட்டது என அலாரம் அடித்திருக்கிறது. ஆனால் இந்த மாற்றத்தால் ஆய்வில் எந்த பாதிப்பும் இல்லை என பேராசிரியர் லட்சுமி தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், ஒருவேளை ஃப்ரீசர் பழுதடைந்தால் அதை சரி செய்வதற்கு ஒரு வாரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், ஃப்ரீசரின் கதவில், "ஃப்ரீசர் பழுதாகிவிட்டது என பீப் ஒலி எழுப்பும். தயவு செய்து யாரும் இதை நிறுத்தி விட வேண்டாம். இந்தப் பகுதியில் எதையும் சுத்தம் செய்ய வேண்டுமென்ற அவசியம் கிடையாது" எனத் துப்புரவுப் பணியாளர்களுக்கு விளம்பரப் பலகை ஒன்றை மாட்டியிருந்தார்.
மேலும் "நீங்கள் அலாரம் சத்தத்தை நிறுத்த விரும்பினால், மியூட் பட்டனை 5-10 நொடிகள் அழுத்திப் பிடித்தால் அலாரம் ஒலி நின்றுவிடும்" என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது போலவே சில நாட்கள் கழித்து அலாரம் சத்தம் ஒலித்தது. ஆனால், அந்த சமயத்திலிருந்த துப்புரவுப் பணியாளர் விளம்பரப் பலகையை பார்க்காமல், ஃப்ரீசருக்கு மின்சாரத்தைக் கொடுக்கும் பிரேக்கரை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டார். இதனால் பிரீசரில் -80°C டிகிரிக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த ஒளிச்சேர்க்கை தொடர்பான பல ஆண்டுகளாக ஆய்வுப் பொருட்கள் முற்றிலும் சேதமாதனது. எனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆய்வு ஒரேடியாக தரைமட்டமானது.
ஃப்ரீசரின் வெப்பநிலை உடனடியாக 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததும் தான் ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அந்த துப்புரவு பணியாளரிடம் கேட்டபோது, "அலாரம் ஒலி தனக்கு எரிச்சலூட்டும் வகையில் இருந்ததால், அதை அணைத்தேன். இதனால் இப்படிப்பட்ட தவறு நடக்கும் என்றுத் தெரியவில்லை" எனக் கூறினார்.
துப்புரவுப் பணியாளரை பணியமர்த்திய நிறுவனம், அவருக்கான போதிய பயிற்சியளிக்கத் தவறியதே இதற்கு காரணம் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தரப்பிலிருந்து எவ்விதமான பதில் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் 20 ஆண்டுகால உழைப்பு நொடியில் சேதமடைந்ததால் ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துப்புரவுப் பணியாளரை நியமித்த நிறுவனத்தின் மீது பத்து லட்சம் அமெரிக்க டாலர் நஷ்டஈடாக வழங்க வழக்கு தொடரப்பட்டுள்ளது.