கர்நாடகப் படுதோல்வியை மறைக்கும் ஒற்றைத் தந்திரம் என ரூ.2,000 நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகள் சரியான பரிவர்த்தனை நடைபெறாமல் இருந்ததால், தற்போது மே 23-ஆம் தேதி முதல் இவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் எனவும், அதற்கு பிறகு செல்லுபடி ஆகாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அதற்கு மாற்றாக, பொருளாதாரத்தில் கரன்சிகளுக்கான தேவையை நிறைவுசெய்யும் வகையில் புதிதாக முதன்முதலில் ரூ.2000 நோட்டுகள் 2016 நவ.2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி சட்டம் 24(1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதாரத்தில் இதர மதிப்புகளில் கரன்சி நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே ரூ.2000 நோட்டுகள் அப்போது வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 89 சதவீத ரூ.2000 நோட்டுகள் கடந்த 2017 மார்ச் மாதத்துக்கு முன்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டவை .
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள், கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!”என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.