2000 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான கப்பலில் இத்தாலி கண்டுபிடித்த அதிசய பொருள். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான கப்பலில் இத்தாலி கண்டுபிடித்த அதிசய பொருள். 
Published on

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான கப்பலின் பாகங்களை இத்தாலி கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கப்பலில் ஒயின் எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஜாடிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.  

மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக நாகரீகம் அடையத் தொடங்கியது முதலே, கடல் வழியில் பயணம் மேற்கொண்டு வருகிறான். இது பெரும்பாலும் வணிகத்திற்காகவே செய்யப்பட்டு வந்தது. இந்தக் கடல் வழி வாணிபத்தில் முன்னோடியாக விளங்கிய சில நாடுகளில் ரோமப் பேரரசும் ஒன்றாகும். ரோம் நகரத்திலிருந்து ஏராளமான பொருட்கள் உலகிலுள்ள பல பகுதிகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் பொருட்களும் ரோமுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

இப்படி கடல் வணிகம் செய்யும்போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 20 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் கரை சேர்வதற்கு முன்பே 500 அடி ஆழத்தில் மூழ்கியிருக்கிறது. இதை இத்தாலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாகவே விபத்துக்குள்ளான கப்பலை கண்டுபிடிப்பது அரிதான நிகழ்வாகும். ஏனெனில் கடல் ஆராய்ச்சியில் மனிதர்கள் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை. பல லட்சம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிந்த மனிதர்கள், நம் உலகிலேயே இருக்கும் ஆழ்கடலில் என்ன இருக்கிறது என்பதை முழுமையாக கண்டுபிடிப்பதில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் தற்போது இந்தக் கப்பலை கண்டுபிடித்தது பெரிய சாதனை என்று சொல்லப்படுகிறது. 

உடைந்த நிலையில் கண்டறியப்பட்ட இந்தக் கப்பலில் சில ஜாடிகளும் கண்டெடுக்கப்பட்டது. இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், இவை எண்ணெய் அல்லது ஒயின் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் சில உடையாத ஜாடிகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதால், அதனுள்ளே ஒயின் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

ஒருவேளை அதனுள்ளே ஒயின் இருந்தால் உலகிலேயே மிகவும் பழமையான ஒயினாக இதுதான் இருக்கும். ஆனால் கடலிலிருந்து அந்த ஜாடிகளை மீட்டெடுப்பதில் சிக்கல் இருப்பதாக இத்தாலி அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது ரோபோக்களைக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதால், அந்த ரோபோக்களை பயன்படுத்தியே ஜாடிகளையும் மேலே கொண்டு வர அதிகாரிகள் முயன்று வருகின்றனர். 

இதற்கு முன்னதாக கடந்த 2018ல் கூட இதேபோல கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் கிரேக்க நாட்டைச் சேர்ந்தது என்றும், அதன் வயது சுமார் 2400 ஆண்டாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போதுவரை இதுதான் கண்டெடுக்கப்பட்ட மிகவும் பழமையான கப்பலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com