மோடிக்கு சவால் விடுக்கும் ராகுல்காந்தி!

மோடிக்கு சவால் விடுக்கும் ராகுல்காந்தி!

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுக்கும் ஒரு தலைவர் உண்டு என்றால் அது ராகுல்காந்திதான்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஐந்துமாத காலம் பாரத் ஜடோ யாத்திரை (ஒற்றுமை யாத்திரை) நடத்தியதை அடுத்த ராகுல்காந்தி பிரபலமானார். கட்சியை மீட்டெடுக்கும் வகையில் அவர் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 3,570 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டார்.

இந்த யாத்திரையின் போதுதான் ஹிமாச்சல மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது தொடர்பான அவதூறு வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத்  நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24 ஆம் தேதி ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு அவர் பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். தொழிலதிபர் கெளதம் அதானிக்கு ஆதரவாக மோடி செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி ஏழைகளிடம் அதிகாரத்தை கொடுப்பதற்காக பாடுபட்டு வருவதாகவும், ஆனால், பிரதமர் மோடி, ஏழைகள் நலனை புறக்கணித்துவிட்டு அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களின் வளர்ச்சியிலேயே அக்கறை செலுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். எம்,பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின், இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதாக கூறினார். மக்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறமுடியவில்லை. எதிர்த்து பேசுவோர் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

பாரத் ஜடோ யாத்திரை தந்த வெற்றியிலிருந்து ராகுல்காந்தி தொடர்ந்து சாதாரண மக்களையும், இளைஞர்களையும் சந்தித்து பேசி வருகிறார். பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிராக குரலெழுப்பி வருகிறார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பா.ஜ.க.வை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அவரது காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. 545 உறுப்பினர்கள் கொண்ட மக்களையில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களே கிடைத்தன. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்த ராகுல்காந்தி, நல்ல வேளையாக, கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யானார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகனான ராகுல்காந்திக்கு ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருந்தது. எனினும் பலரின் வற்புறுத்தலுக்கு இணங்க 2004 ஆம் ஆண்டு அரசியலில் குதித்தார். 2007 இல் கட்சியின் பொதுச் செயலாளரானார். பின்னர் 2013 ஆம் ஆண்டில் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு, அன்னை சோனியா காந்தியிடமிருந்து கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸ் இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்துவிடும் என்று ராகுல்காந்தி எண்ணியிருந்தார். ஆனால், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் புதுப்பது விஷயங்களை முன்னிருத்தி அவர் பிரதமர் மோடியை எதிர்த்து வந்தாலும், அவரிடம் வேகம் இருக்கும் அளவுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்பூசல்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. முதலில் அவற்று தீர்வு காண்பதில் ராகுல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் எனில் இதர அரசியல்கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

ராகுல்காந்தி மெல்ல, மெல்ல ஒரு பெரிய தலைவராக உருவெடுத்து வந்தாலும் துரதிருஷ்டம் அவரை துரத்துகிறது. மோடியை வீழ்த்துவதற்கு இன்னும் பலம் தேவை. மக்கள் ராகுல்காந்தியின் செயல்பாட்டில் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்ப அவர் தன்னை மாற்றிக்கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டால் 2024 மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com