2024 தேர்தல்: தி.மு.க.வின் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க?

2024 தேர்தல்: தி.மு.க.வின் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க?
Published on

சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தாலோ, தகவல் வந்தாலோ அங்கே ஆஜர் ஆவது தான் அமலாக்கத்துறையின் பணி. அ.தி.மு.க.வில் போக்குவரத்துத் துறை அமைச்சராக (2011 - 2015) செந்தில் பாலாஜி இருந்த போது பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கைப் பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையும் புதிதாக ஒரு வழக்கைப் பதிந்து, விசாரணை செய்தது. நீதிமன்றத்தில் தடை வாங்கியும், பின் அது நீக்கப்பட்டும் சோதனைகள் நடைபெற்று வந்தது. மே இறுதியில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனையை நடத்திய அமலாக்கத்துறை அவரை இன்று கைது செய்துள்ளது. இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டுமா அமலாக்கத்துறை கைது செய்கிறது? அமலாக்கத்துறை விசாரிக்கும், கைது செய்யும் நபர்களில் ஏன் பாஜகவைச் சேர்ந்த நபர்கள் மட்டும் இடம்பெறுவதே இல்லை என்கிற கேள்வி இயல்பாகவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கடந்தாண்டு நேஷனல் ஹெரால்ட் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டதுமே, மணல் குவாரி விவகாரத்தில் அவரது குடும்பத்தினரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்தது.

கடந்தாண்டு பிப்ரவரியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் குடும்பத்தை நெருக்கியது அமலாக்கத்துறை. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் உறவினர் அஜித் பவாருக்கு ஸ்கெட்ச் போட்டது அமலாக்கத்துறை.

காஷ்மீரில் முன்னாள் முதல்வர்களான பரூக் மற்றும் உமர் அப்துல்லாக்கள், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ராஜஸ்தானின் அசோக்கெலாட், சத்தீஸ்கரின் பூபேஷ் பாகேல் ஆகியோருக்கு எதிராகவும் அமலாக்கத்துறை பல வழக்குகளைப் பாய்ச்சி இருக்கிறது. இப்பிடி பாஜக அல்லாத பிரமுகர்கள் மீது பாரபட்சமில்லாமல் வழக்குகளைப் பாய்ச்சி வருகிறது அமலாக்கத்துறை.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறைக்கு அவசியமான சலுகைகள், அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பணமோசடி புகார் IPC 420 ன் கீழ் பிரிவில் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் கிடைப்பது எளிது. அதே நபரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்தால் ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் தரும் பதில்களை வைத்தே வழக்கை முடக்கி வைக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக அமலாக்கத்துறை விளங்கி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் கைது மூலமாக திமுகவில் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பார்க்கிறதா பாஜக?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com