5 அடி ஆழத்தில் 22 செப்புச் சிலைகள் - வெளிப்பட்ட சோழர் கால கலைப் பொக்கிஷங்கள்; மெத்தனம் காட்டிய மாவட்ட நிர்வாகம்!

5 அடி ஆழத்தில் 22 செப்புச் சிலைகள் - வெளிப்பட்ட சோழர் கால கலைப் பொக்கிஷங்கள்; மெத்தனம் காட்டிய மாவட்ட நிர்வாகம்!

சீர்காழி அருள்மிகு சட்டைநாதசாமி திருக்கோயிலின் மேற்கு கோபுரம் அருகில் யாகசாலை அமைக்க நிலத்தை தோண்டிய போது கிடைத்ததுள்ள சோழர்கால ஐம்பொன் திருமேனிகளும், பூசை பாத்திரங்களும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தோண்டியெடுத்து மக்களின் பார்வைக்கு வைப்பதில் கோயில் நிர்வாகம் சுறுசுறுப்பு காட்டியிருந்தும் முடிவெடுப்பதில் மாவட்ட நிர்வாகம் தாமதம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோவில் உள்ளது. திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தலமாகும். மேலும் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்களுக்கும் தனி சன்னதி இங்குதான் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. தற்போது அடுத்த மாதம் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

இந்நிலையில் திருப்பணி குழுவினர், யாகசாலை அமைப்பதற்காக களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் பள்ளம் தோண்டினார்கள். இரண்டு அடி தோண்டும்போது செப்புப் பட்டயங்கள் தட்டுப்பட்டுள்ளன. மேலும் 5 அடி வரை தோண்டியதில் அடியில் •புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன.

ஐம்பொன் சிலைகள் பற்றிய செய்தி கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருமை ஆதீனம், இடத்தை பார்வையிட்டு அங்கேயே தங்கியிருந்து அகழாய்வு பணிகளை முடுக்கிவிட்டார். விஷயத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரண்டு வர ஆரம்பித்தார்கள். மணல் மூடியதால் அடையாளம் தெரியாமல் இருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்து, தூய்மைப்படுத்திய பின்னர், வரிசையாக அடுக்கி வைத்த கோயில் நிர்வாகம் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தது.

அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தெளிவு இல்லாததால் குழப்பநிலை நீடித்தது. ஐம்பொன் சிலைகளை அங்கேயே வைத்திருப்பதா அல்லது அரசின் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்வதாக என்பது குறித்த விவாதங்கள் நடந்தன. கோயில் வளாகத்திற்குள் சிலை கிடைத்திருப்பதால் கோயிலில் வைத்து பூஜை செய்யவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

சம்பவம் இடத்திற்கு ஆறு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த ஆட்சியர், ஐம்பொன்சிலைகளை பார்வையிட்டதுடன் வட்டாட்சியர், தொல்லியல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அகழாய்வில் கிடைத்த சிலைகளை உடனே அரசு நிர்வாகம் கைவசப்படுத்துவதாக அறிவித்ததும், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியருக்கும் தருமை ஆதீனத்திற்கும் இடையே இரண்டு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை கோயில் வளாகத்தில் வைத்து பாதுகாப்பது என்றும், காவல்துறையின் முன்னிலையில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com