தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
Published on

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த வாரம்தான் தமிழக மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சென்ற சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், தாக்குவதும், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை, படகுகளை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருக்கின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் நான்கு விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார். மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்தியும் இருக்கிறார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பதற்கான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொள்வதுடன், மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவிகளை முழுமையாக வழங்கும்படியும் வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com