வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2.5 கோடி ரூபாய் தங்க நகைகள்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2.5 கோடி ரூபாய் தங்க நகைகள்!

ழை பெய்து வெள்ளம் வந்தால், அதில் வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு சாமான்கள்தான் அடித்துக்கொண்டு சென்றதாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தங்க நகைக் கடைக்குள் புகுந்த வெள்ளம், கடையிலிருந்து நகைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு சென்ற தகவலை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடைமழை கொட்டித் தீர்த்து. இந்த மழையில பெங்களூரு நகரமே வெள்ளக் காடாக மாறிக் காட்சி அளித்தது. நகரெங்கும் பிரதான சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் அனைத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த அடைமழை வெள்ளத்தில் சிக்கி சுமார் எட்டு பேர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெங்களூரு நகரத்தின் மல்லேஸ்வரம் பகுதியின் தாழ்வான பகுதி ஒன்றில் அமைந்திருந்த தங்க நகைக் கடை ஒன்றுக்குள்ளும் கன மழையின் வெள்ளம் புகுந்து இருக்கிறது. இந்த வெள்ளம் கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றதாகக் சொல்லப்படுகிறது. வேகமாக வந்த வெள்ள நீரில் தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டபோது, அந்தக் கடையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பணியாளர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் நிலவியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வெள்ளக் கபளீகரத்தில் கடையில் இருந்த 80 சதவிகித தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகக் கடையின் உரிமையாளர் மிகுந்த மன வேதனையுடன் கவலை தெரிவித்து இருக்கிறார். மேலும், கடையில் மீதமுள்ள நகைகளும் வெள்ள நீரில் நனைந்த நிலையில் உள்ளதாகவும் இவர் கூறி உள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்க நகைகளை மீட்பது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளிடம் நகைக்கடை உரிமையாளர் உதவி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com