பருவம் தப்பிய மழையால் 25% மாமரங்கள் பாதிப்பு: உ. பி விவசாயிகள் கவலை!

பருவம் தப்பிய மழையால் 25% மாமரங்கள் பாதிப்பு:  உ. பி விவசாயிகள் கவலை!
Published on

ந்த ஆண்டு அமோக விளைச்சலை எதிர்பார்த்து, பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை உற்சாகமாக இருந்த உத்தரபிரதேச மாம்பழ விவசாயிகள், திடீரெனப் பெய்த பருவம் தப்பிய மழையால் ஏற்கனவே 20-25 சதவீத பயிரை இழந்து விட்டபடியால், இப்போது  செய்வதறியாது கைவிரித்து நிற்கின்றனர்.

மத்திய துணை வெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனத்தின் (CISH) மதிப்பீட்டின்படி, மாநிலம் தழுவிய பயிர் சேதம் 25% வரை இருந்தது, மாநிலத்தின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தியாளர்களில் ஒன்றான மல்-மலிஹாபாத் பெல்ட்டில் சேதம் இருக்கலாம். மழை, ஆலங்கட்டி மழை மற்றும் அதிவேகக் காற்று காரணமாக 35% பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உண்மையில், விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, நாட்டிலேயே மாம்பழ உற்பத்தியில் உ.பி. தான் முன்னணி வகிக்கிறது.  நாட்டின் மொத்த உற்பத்தியில் 24 சதவீத பங்களிப்பை உ.பி கொண்டுள்ளது. அத்துடன் பிரீமியம் தசரி மாம்பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் உத்தரப்பிரதேசமே நீடித்து நிற்கிறது.

பெரிய பழத்தோட்டங்கள் நிறைந்த மலிஹாபாத் பெல்ட்டில், 31,000 ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழ விவசாயமே உள்ளது. தசரி மற்றும் பிற முக்கிய ரகங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. மலிஹாபாத் உ.பி.யின் பிரதான மாம்பழ ஏற்றுமதி மையமாக உள்ளது.

மலிஹாபாத், ககோரி, மால், மோகன்லால்கஞ்ச், பாரபங்கி மற்றும் சீதாப்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய லக்னோ மாம்பழப் பகுதியில் உள்ள மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மாம்பழத் தோட்டங்களை வைத்துள்ளனர். மாலின் கன்ஹையா லால் மற்றும் மலிஹாபாத்தைச் சேர்ந்த கலீல் மிர்சா போன்ற மாம்பழ உற்பத்தியாளர்கள் மாம்பழ உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

CISH இயக்குனர் டி தாமோதரன் கூறுகையில், மாநிலத்தின் மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களான சீதாப்பூர், மலிஹாபாத், பாரபங்கி, பிஜ்னோர்,புலந்த்ஷாஹர், முசாபர்நகர், ஷாஜஹான்பூர், ஷாம்லி, வாரணாசி மற்றும் குஷிநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளைக் கண்டறிய எட்டு விஞ்ஞானிகள் குழுக்கள் அமைக்கப்பட்டன என்றார்.

அத்துடன், 20-25% வரை சேதம் அடைந்த மற்ற மாவட்டங்களை விட லக்னோ பெல்ட்டில் உள்ள மால்-மலிஹாபாத் பகுதி அதிக சேதத்தை சந்தித்துள்ளது (35%) என்றும் தாமோதரன் கூறினார்.

CISH விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மாமரங்கள் பூவெடுக்கும் காலத்தில் பெய்யக்கூடிய பருவம் தப்பிய மழையானது பல்வேறு வழிகளில் பூஞ்சை நோய்க்கு வழிவகுக்கும். பழங்களில் ஆந்த்ராக்னோஸ் தொற்று, பூஞ்சை நோய் மற்றும் பூஞ்சை காளான் ஆகியவை சரியான நேரத்தில் அல்லாது பருவம் தப்பி பெய்யும் மழையினால் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்றாகும்.

“பயிரைக் காக்க பழம் வைக்கும் காலத்தில் பயன் படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் கூட, பருவமழை பொய்த்து, பயனற்றதாகிவிடும். இது மகசூல் மற்றும் அதன் தரத்தையும் பாதிக்கிறது" என்கிறார் வேளாண் விஞ்ஞானி டாக்டர் அவ்தேஷ் மிஸ்ரா.

"இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் பருவமழை எங்கள் கனவுகள் அனைத்தையும் சிதைத்து விட்டது" என்று அகில இந்திய மாம்பழ உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் இன்ஸ்ராம் அலி கூறுகிறார். முதல் மழை பூக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது, ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்ச்சியான மழை, அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஆலங்கட்டி மழை, அத்தனையுமாகச் சேர்ந்து பழங்களை நிறம் மாற்றியது. இப்போது அவை ஆரோக்கியமான பழங்களாக மாறலாம் அல்லது வளராமலும் போகலாம்.

தசரி, சௌசா, லாங்டா மற்றும் லக்னோவா ஆகிய ரகங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று அலி கூறுகிறார். இருப்பினும், CISH விஞ்ஞானிகள் சீரற்ற வானிலை இருந்தபோதிலும் அதிக மகசூல் கிடைக்கும் என்று இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர். மாமரங்கள் பூவெடுக்கும் காலம் என்பது மாம்பழ விவசாயத்தில் மிக முக்கியமானதொரு காலகட்டம். அதைப் பாதிக்கும் விதத்தில் இந்த வருட பருவம் தப்பிய மழை அமைந்து விட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com