சேலம் உட்கோட்ட ரயில் நிலையங்களில் 273 சிறுவர்கள் மீட்பு.

சேலம் உட்கோட்ட ரயில் நிலையங்களில் 273 சிறுவர்கள் மீட்பு.
Published on

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்று வலியுறுத்தியும், மீறினால் கடுமையான தண்டனைகள் வழங்கியும் கூட இன்னும் குழந்தைகளை பணியில் அமர்த்தி அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் முதலாளிகள் என்றுதான் திருந்துவார்களோ? வறுமையைக் காரணம் காட்டி பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோரும் குற்றவாளிகளே. ஆனால் அவர்களுக்கேத் தெரியாமல் பிள்ளைகளிடம் ஆசைகாட்டி அவர்களை அழைத்துச்சென்று அவர்களின் பாதையை திசை திருப்பி விடுபவர்களை என்ன சொல்ல?

சேலம் உட்கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஆண்டு 273 சிறுவர்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்த தகவல் இன்னும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலைய பகுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு மீட்கப்பட்டுள்ளனர். ஜவுளி ஏற்றுமதி தனியார் நிறுவனங்கள் மற்றும்  உணவகங் களில்    பணியாற்ற 15 முதல் 17 வயது உள்ள சிறுவர், சிறுமிகளை (குற்றம் எனத் தெரிந்தும்) சிலர் அழைத்து வருகின்றனர்.

         ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் கண்காணிப்பை பார்த்ததும் பிடிபட்டு விடுவோம் எனப் பயந்து அவர்களை அங்கேயே விட்டுச் தப்பிச் செல்கின்றனர். அப்படி மீட்கப்படும் சிறுவர் சிறுமிகளை சைல்ட் லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்த பிறகு அவர்களிடம்  உரிய விசாரணை நடத்தி பெற்றோரை வரவழைக்கின்றனர். அவர்களிடம் 18 வயது ஆவதற்கு முன் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது என்றும் பள்ளியில் சேர்ந்து படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

துபற்றி அதிகாரிகள் கூறுகையில் ”வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் நபர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பலரும் பிடிபடுகின்றனர். அவர்களை அழைத்துவரும் புரோக்கர்கள் போலீசாரை பார்த்ததும் சிறுவர்களை அங்கேயே விட்டுவிட்டு செல்கின்றனர். அப்படிப் பட்டவர்களை மீட்டு சைல்டு லைன் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பிறகு பெற்றோரை வரவழைத்து ஒப்படைக்கிறோம். கடந்த ஆண்டில் சேலத்தில் 105 பேரும் தர்மபுரியில் 4 பேரும் ஓசூரில் 3 பேரும் காட்பாடியில் 80 பேரும் ஜோலார்பேட்டையில் 81 பேரும் என மொத்தம் 273 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

         குறைந்த சம்பளம் தந்தால் போதும் என குழந்தைகளை பணிக்கு எடுக்கும் முதலாளிகளும் சம்பாதிப்பதை டாஸ்மாக்கில் விட்டு விட்டு தன் பிள்ளையை வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க நினைக்கும் தந்தைமார்களும் சற்றேனும் சிந்தியுங்கள். ஒரு குழந்தையின் அடிப்படை உரிமைகள் உங்களால் மறுக்கப்பட்டு அவர்களின் சுயவாழ்வு பறிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து திருந்துங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com