
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தெரு நாய்கள் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி தரப்பில் இருந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த போதிலும் கூட நடை பாதைகள், பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், தெருக்கள், சந்துகள் என பல்வேறு இடங்களில் தெரு நாய் தொல்லை தொடர்கிறது. அவை ஓட்டல்கள் மற்றும் இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுகளையும், குப்பைகளில் கிடக்கும் கழிவு பொருட்களையும் தின்றுவிட்டு தெருக்களில் சுற்றித் திரிகின்றன. இப்படி சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு முறையாக வெறிநோய் தடுப்பூசி போடப்படுவதில்லை.
அதுமட்டுமின்றி தனியாக வருபவர்களையும், குழந்தைகளையும் குறிவைத்து தெருநாய்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு தாக்கும் சம்பவங்கள் நாள்தோறும் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் தான் உள்ளது. இதனால் அந்தத் தெரு நாய்கள் கடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
அதுமட்டுமின்றி இவை இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விடாமல் துரத்துகின்றன. இதனால் பல சமயங்களில் அச்சத்தில் இருசக்கர வாகனங்களில் இருந்து தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மாநிலம் முழுவதும் 4,80,483 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அதிகபட்சமாக, அரியலூரில் 37,023 பேரும், கடலூர் மாவட்டத்தில் 23,997 பேரும், ஈரோட்டில் 21,507 பேரும், சென்னையில், 24,088 பேரும், கோவையில் 12,097 பேரும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 பேர் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் செல்லப் பிராணிகளால் கடிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளாக இருந்தாலும் சரி, வெளியில் திரியும் நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட எந்த விலங்குகள் கடிக்கும்போது காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டாலும், அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் ஆழமான காயங்களுக்கு தடுப்பூசியுடன் சேர்த்து ஆர்.ஐ.ஜி. எனப்படும் ரேபிஸ் இன்யூனோகுளோபளின் தடுப்பு மருந்தையும் செலுத்த வேண்டும். விலங்கு கடித்த முதல் நாள், 3-வது நாள், 7-வது நாள் மற்றும் 21-வது நாள் என 4 தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது. இம்யூனோகுளோபளின் மருந்தானது முதல் நாளிலேயே ரேபிஸ் தடுப்பூசியுடன் செலுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
விலங்கு கடித்து காலதாமதாகவோ அல்லது அதை தடுப்பூசியை மட்டும் தனியாகவோ செலுத்தினால் பலனளிக்காது. ரேபிஸ் உயிரிழப்பையும் தவிர்க்க முடியாது. எனவே, காயங்களை சரியாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும், தடுப்பூசிகளை அதன் உற்பத்தியாளர்கள் கூறும் வழிகாட்டுதலின்படி சேமிப்பதும் மிகவும் முக்கியம் பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.